தண்ணீர் குடிக்க சென்ற சிறுவனை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு
கோவை; ராமநாதபுரம் பகுதியில் தண்ணீர் குடிக்க, திருமண மண்டபத்திற்குள் சென்ற சிறுவனை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராமநாதபுரம், வி.வி.சி., காலனி பகுதியை சேர்ந்தவர் காவியா, 34. இவரது 16 வயது மகன், தனது நண்பர்களுடன் அப்பகுதியில் கிரிக்கெட் விளையாட சென்றார். விளையாடி கொண்டிருந்த போது சிறுவர்களுக்கு தாகம் எடுத்ததால், ரெட்பீல்டு ரோட்டில் உள்ள புலியகுளம் சர்ச் திருமண மண்டபத்திற்கு, நண்பர்களுடன் சென்றார். அங்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. சிறுவர்கள் அனைவரும் உணவு சாப்பிடும் இடத்துக்கு சென்றனர். அப்போது, அங்கிருந்தவர்களுக்கும், சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தட்டி கேட்ட, திருமண பெண்ணின் தந்தை மாணிக்கத்திடமும், சிறுவர்கள் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மாணிக்கம், காவியாவின் மகனான 16 வயது சிறுவனின் தலையில் அடித்தார். சிறுவன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுவனின் தாய் காவியா ராமநாதபுரம் போலீசில் அளித்த புகாரில், போலீசார் மாணிக்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.