உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் பலி

பொள்ளாச்சி அருகே மண்ணுாரை சுந்தரமூர்த்தி என்பவரின் குத்தகை தோட்டத்தை, சபரீஸ்வரன்,30 என்பவர் டிராக்டரால் உழுது கொண்டு இருந்தார். அப்போது, டிராக்டரில் உட்கார்ந்து இருந்த மண்ணுாரை செல்வக்குமார் என்பவரின் மகன், 7ம் வகுப்பு படித்த மாணவர் ஹரிஷ்,12, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புகையிலை விற்றவர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மணி, 57, கூலி தொழிலாளி. இவர், கிணத்துக்கடவு ஆர்.எஸ்., ரோடு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கடையில் போலீசார் சோதனை செய்தபோது, 400 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தொழிலாளி தற்கொலை

நெகமம், காட்டம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து, 45, தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நீண்ட நாட்களாக மது அருந்துவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், மாரிமுத்து திடீரென மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார்.இதனால், அவருக்கும், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மனமுடைந்த மாரிமுத்து, சாணி பவுடர் கரைசலை குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் மாரிமுத்துவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள்.மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் விவசாயி பலி

நெகமம், போளிகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கிட்டுச்சாமி, 64, விவசாயி. இவர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டிக்கு, பைக்கில் சென்றார். அப்போது, இவரின் பின்னால் வந்த கார் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுகின்றனர்.

ஆற்றில் மூழ்கிய வாலிபர் பலி

பொள்ளாச்சி அருகே, கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கோகுல்,25. இவர் தனது நண்பர்கள் காளீஸ்வரன், சரவணா சூர்யா ஆகியோருடன் நேற்றுமுன்தினம் விடுமுறை நாள் என்பதால், அம்பராம்பாளையம் ஆழியாறு ஆற்றுக்கு வந்து குளித்துள்ளார்.அப்போது, ஆற்றில் இருந்த சூழலில் சிக்கிய கோகுலை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

பூட்டிய வீட்டில் கைவரிசை

பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பெரியண்ணா,53. இவர், குடும்பத்துடன் கடந்த, 13ம் தேதி மாமியாரின் சொந்த ஊரான சேலத்துக்கு சென்றார்.நேற்று முன்தினம் வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததுடன், பீரோவில் இருந்த, இரண்டு பவுன் நகை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ