போலீசாரால் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க முடியலை: பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
கோவை : ''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை, போலீஸ் துறையால் பராமரிக்க இயலவில்லை,'' என, தமிழக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.கோவை விமான நிலையத்தில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 'டாஸ்மாக்' ஊழல் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம். இதில் தொடர்புடைய துணை முதல்வரின் நண்பர்கள் ரித்தீஷ், ஆகாஷ் லண்டன் சென்று விட்டதாக சொல்கிறார்கள். துணை முதல்வராக உள்ள உதயநிதி, 'ஈ.டி.,க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம்' என சொன்னார். 2011ல் தேர்தல் நடந்தபோது, கூட்டணி பேச்சுவார்த்தையின் போது மாடியில் ஈ.டி., ரெய்டு நடந்தது; கீழே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு மட்டும் ஈ.டி.,க்கு பயந்து, பேச்சுவார்த்தை நடத்தினார்களா என தெரியவில்லை. அப்போது இருந்து உதயநிதிக்கு, அமலாக்கத்துறை மீது பயம் இருப்பதால், இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்புறம் எதற்காக, ரித்தீசும், ஆகாசும் பயந்து வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்? யார் ஆட்சி செய்தாலும் கண்டிப்பாக நீதி வேண்டும்.ராஜ்ய சபா, தேர்தல் கூட்டணி குறித்து மேலிடம் முடிவு செய்யும். ராஜ்ய சபா எம்.பி., சீட் தொடர்பாக, கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தேவைப்பட்டால் கொடுப்போம். தங்க நகை கடனுக்கு விதித்துள்ள, புதிய விதிமுறைகளால் ஏற்படும் சிக்கல்களை நிதியமைச்சரிடம் பேசி, விதிமுறைகளை எளிதாக்க முயற்சி செய்வோம். தி.மு.க., ஆட்சியால், தமிழக மக்களுக்கு நிறைய சிரமங்கள் இருக்கின்றன. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, கட்டப்பஞ்சாயத்து போன்றவை இந்த ஆட்சியில் அளவுக்கு அதிகமாக போய்க்கொண்டிருக்கின்றன. சட்டம் - ஒழுங்கை போலீஸ் துறையால், பராமரிக்க இயலவில்லை. எல்லா கட்சிகளும் இணைந்து, இந்த சட்டவிரோத ஆட்சியை அகற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
'மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு'
நயினார் நாகேந்திரன் கூறுகையில், ''மதுரையில் ஜூன் மாதம், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து, பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். ஆறுபடை வீடுகள் அலங்காரம் செய்யப்படும் கால்கோள் விழா, நாளை மறுநாள் (29ம் தேதி) நடக்கிறது,'' என்றார்.