உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிறந்த தண்ணீர் மேலாண்மைக்காக  பொள்ளாச்சி விவசாயிக்கு விருது 

 சிறந்த தண்ணீர் மேலாண்மைக்காக  பொள்ளாச்சி விவசாயிக்கு விருது 

பொள்ளாச்சி: சிறந்த நீர் மேலாண்மை செய்த, பொள்ளாச்சியை சேர்ந்த ஒடையகுளம் பாசன சங்கத்தலைவர் விக்ரம் முத்து ரத்தின சபரிக்கு, ஜனாதிபதி விருது வழங்கினார். பி.ஏ.பி. திட்டம், ஆழியாறு பாசனம் வேட்டைக்காரன்புதுார் கால்வாய் ஒடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சிறந்த தண்ணீர் மேலாண்மைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இதற்கான சிறந்த மேலாண்மை செய்த சங்க தலைவர் விக்ரம் முத்து ரத்தின சபரிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றுமுன்தினம் விருது வழங்கி கவுரவித்தார். விருது பெற்ற விவசாயிக்கு, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் பகுதி விவசாயிகள், சங்க நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். இது குறித்து, விவசாயி விக்ரம் முத்து ரத்தின சபரி கூறியதாவது: மத்திய அரசு, 2024ம் ஆண்டுக்கான ஆறாவது தேசிய நீர் விருதுகள் கடந்தாண்டு அக். மாதம் துவங்கப்பட்டன. பி.ஏ.பி., திட்டத்தில் எங்களது சங்கம் வாயிலாக விண்ணப்பித்து பங்கேற்றோம். அதில், சிறந்த நீர் பயனர் சங்கமாக, இந்தியளவில் முதலிடம் பெற்ற வேட்டைக்காரன்புதுார் ஒடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு விருது வழங்கப்பட்டது. அதிகாரிகள் ஒத்துழைப்பு இருந்ததால் இந்த விருது கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் நீர் பங்கீடு சரிசமமாக வழங்கவும், டேட்டா பேஸ் சாப்ட்வேர் மேம்படுத்தியுள்ளோம். விவசாயிகளின் தரவு மேலாண்மை வாயிலாக, வருமானத்தை அதிகரிக்க உதவும் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். பி.ஏ.பி. வேட்டைக்காரன்புதுார் கால்வாயில், நுண்ணுயிர் பாசன திட்டம் செயல்படுத்த வேண்டுமென கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, 7.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆய்வு மேற்கொண்டது. நுண்ணுயிர் பாசன திட்டம் செயல்படுத்தினால், இலவச மின்சாரம் மிச்சம் செய்வதுடன் அதிக மகசூல் கிடைக்கும். தண்ணீர் சிக்கனம், ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மையை அங்கீகரிக்க விருது வழங்கப்பட்டுள்ளது. இது உத்வேகத்தை கொடுக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி