| ADDED : டிச 10, 2025 08:19 AM
மேட்டுப்பாளையம்: -: காரமடை ஒழுங்குமு றை விற்பனை கூடத்தில், முதன் முறையாக நடந்த ஏலத்தில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாக்கு ஏலம் போனது. காரமடை அருகே சிறுமுகை சாலையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு முதன் முறையாக நேற்று, பாக்கு ஏலம் நடந்தது. பத்து விவசாயிகள், 26 குவிண்டால் பாக்கு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஐந்து வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் முன்னிலையில், மறைமுக ஏலம் நடந்தது. இதில் ஒரு கிலோ வரப்பாக்கு குறைந்தபட்ச விலை, 190 ரூபாய்க்கும், அதிகபட்ச விலை, 210 ரூபாய்க்கும், பச்சை பாக்கு குறைந்த விலை, 55க்கும், அதிக விலை, 65 ரூபாய்க்கும் ஏலம் போனது. உரித்த ராசி ரகம் பாக்கு குறைந்த விலை, 435 ரூபாய்க்கும், அதிக விலை, 485 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தமாக நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பாக்கு ஏலம் நடந்தது. ஏலம் முடிந்தவுடன் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் செய்திருந்தார்.