| ADDED : ஜன 15, 2024 09:57 PM
அன்னூர்:அன்னூர் வட்டாரத்தில் பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது.அன்னூர் அ.மு.காலனியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பொங்கல் விழா நேற்று நடந்தது. ரேஷன் கடை முன்புறம் பொது பொங்கல் வைக்கப்பட்டது. குலவை சத்தத்துடன் கும்மியடித்தனர்.எக்ஸ்சேஞ்ச் வீதி, ராஜிவ் வீதி உள்பட ஆறு வீதிகளில் 120 பேர் கோலப் போட்டியில் பங்கேற்றனர். ஓவியப் போட்டி நடந்தது. வாலிபர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில், பாரம்பரிய முறைப்படி நேற்று பொங்கல் விழா நடந்தது. மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் பொங்கல் விழாவுக்கு வந்தனர். உறியடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பொங்கல் வைக்கப்பட்டு விநாயகருக்கு அபிஷேக பூஜை அலங்கார பூஜை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்த போலீசார் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அன்னூரில் நான்குகோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட நவீன மின் மயானம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. முதல் முறையாக மின் மயான வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. சமூக ஆர்வலர் சுரேஷ் மற்றும் மயான ஊழியர்கள் பங்கேற்றனர்.கணேசபுரத்தில் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பொது பொங்கல் வைக்கப்பட்டது. வடக்கு மாவட்ட செயலாளர் ரவி தலைமை வகித்தார். 200 பேருக்கு பொங்கல் வழங்கப்பட்டது. காட்டம்பட்டியில் நடந்த கோலப் போட்டியில் 100 பெண்கள் பங்கேற்றனர். சிறந்த கோலங்களுக்கு பரிசும், மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.விழாவில் தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் தனபாலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹக்கீம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.