உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று துவங்குகிறது

விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று துவங்குகிறது

சோமனூர்; கூலி உயர்வு பிரச்னையில் தீர்வு காண கோரி, விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று சோமனூரில் துவங்குகிறது.கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி ஜவுளி தொழில் பிரதானமாக உள்ளது. மின் கட்டண உயர்வு, ஒப்பந்த கூலி குறைப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகினர். புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தர,இரு மாவட்ட நிர்வாகங்களிடம் கோரிக்கை விடுத்தனர்.கடந்த, 15 மாதங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாததால், கடந்த, மார்ச், 19 ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் விசைத்தறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், கலெக்டர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, போராட்டத்தை தீவிரப்படுத்த, ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி, சோமனூர் - கருமத்தம்பட்டி ரோட்டில் யூனியன் வங்கி அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் துவங்குகிறது.இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்க தலைவர் பூபதி கூறியதாவது:ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலியை குறைத்து வழங்காத வகையில், சட்ட பாதுகாப்புடன் கூலி உயர்வு பெற்று தர கோரியுள்ளோம். இப்பிரச்னையில் மாநில, மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி, நாளை (இன்று) முதல் ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ