மேல்நிலை வகுப்புக்கு செய்முறை தேர்வு; மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழிகாட்டல்
பொள்ளாச்சி,; பிளஸ் 1, பிளஸ் 2 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு செய்முறை தொடர்பான 'மல்டிபிள் சாய்ஸ்' வினாத்தாள் வழங்கி, செய்முறை தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இன்று முதல், 21ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில், உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களின் விருப்பத்தின் பேரில், ஆய்வக உதவியாளர் நியமனம் செய்து கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.அல்லது, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு பதிலாக, செய்முறை தொடர்பான 'மல்டிபிள் சாய்ஸ்' வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கி, செய்முறைத் தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியலை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். செய்முறை தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக முதன்மைக் கண்காணிப்பாளர், புறத் தேர்வாளர்கள், அகத்தேர்வாளர்கள், தேவைக்கு ஏற்ப திறமையான உதவியாளர்கள், எழுத்தர், அலுவலக உதவியாளர்கள், துாய்மைப் பணியாளர், குடிநீர் வழங்குபவர் உள்ளிட்டோரை நியமனம் செய்து கொள்ள வேண்டும்.அதன்படி, செய்முறைத் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண்களை, இணைய தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் பூர்த்தி செய்யப்பட்ட செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்களை, பாடவாரியாக தனித்தனி உறையில் அரக்கு முத்திரையிட்டு, சொந்தப் பொறுப்பில் பாதுகாப்பாக வைத்திருக்கவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி, செய்முறை புறத்தேர்வு, செய்முறைப் பதிவேடு மற்றும் திறன் மதிப்பீட்டிற்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை, ஒரு பதிவேட்டில் பதிந்து, தலைமையாசிரியர்கள் தங்களது சொந்த பொறுப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளி மாணவர்கள் பட்டியல் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு உத்தரவுப்படி செய்முறைத்தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.