உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதட்டமான ஓட்டு சாவடிகள் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்: கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு

பதட்டமான ஓட்டு சாவடிகள் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்: கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு

பெ.நா.பாளையம்: வரும் சட்டமன்ற தேர்தலின் போது பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டு, தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், வருவாய்த் துறையின் தேர்தல் பிரிவு அலுவலர்கள் செய்து வருகின்றனர். வாக்காளர்களின் நன்மைக்காக கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கவும், ஓட்டுச்சாவடிகளை இடம் மாற்றவும், ஓட்டுச் சாவடிகளை இணைக்கும் பணியையும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் செய்து வருகின்றனர். இது தவிர, ஓட்டு சாவடிகளில் வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதியாக வாக்களிக்க, போதிய வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும், ஆய்வுகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில், 3,117 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மட்டும், 460 ஓட்டு சாவடிகள் உள்ளன. இதில், பதட்டம் நிறைந்த ஓட்டுச் சாவடிகள் எவை என கண்டறியும் பணியை போலீசார் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள், வருவாய்த் துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், முதல் கட்டமாக சாதி, மத மோதல் தொடர்பான ஓட்டு சாவடிகள் எவை என, கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், இதுவரை நடந்த லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறிப்பாக, சாதி, மத ரீதியிலான வன்முறை சம்பவங்கள் எந்த ஓட்டு சாவடியில் நடந்தன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவதாக அரசியல் கட்சிகள் இடையே மோதல் நடக்கும் சம்பவங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், குறிப்பிட்ட ஓட்டு சாவடியில் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் மோதல், ஓட்டு போடும் இயந்திரங்களை எடுத்துச் செல்லுதல், சுமுகமான தேர்தல் நடத்த முடியாமல் தடை செய்யும் நபர்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பதட்டமான ஓட்டு சாவடிகள் பட்டியலில் அவை சேர்க்கப்பட்டு, அங்கு வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள், உயர்ரக தொழில்நுட்ப வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன. மூன்றாவதாக கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தடாகம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை, தமிழக, கேரள எல்லையின் ஆனைகட்டி மற்றும் பல்வேறு மலை கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் இப்பகுதிகளில் மலைப்பகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிகளை மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட நக்சல்களிடமிருந்து பாதுகாக்க, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய் துறையினர் கூறுகையில்,' இம்முறை உயர்ரக தொழில்நுட்ப வாகனங்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் அதிகளவு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் படிப்படியாக நடந்து வருகின்றன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை