4வது முறையாக காயகல்ப விருது பெற ஆயத்தம்! அரசு மருத்துவமனையில் பணிகள் தீவிரம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை காயகல்ப விருது பெற தயார் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, நான்கு ஏக்கர் 19.50 சென்ட் பரப்பளவில், செயல்படுகிறது. தற்போது, 462 படுக்கை வசதிகளுடன் செயல்படுகிறது. தினமும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் உள்ள நான்கு அறுவை சிகிச்சை அரங்குகளில், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருமுறை தேசிய தரச்சான்று விருது பெற்ற மருத்துவமனை இம்முறை காயகல்ப விருதுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த மாதம், அரசு மருத்துவமனையில்மாநில அளவிலான காயகல்ப ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், காயகல்ப விருதுக்கு மருத்துவமனையை தயார் செய்யும் நிகழ்ச்சி நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது: காயகல்ப பிரிவின் ஒரு பகுதியாக, சூழல் பாதுகாப்பு மருத்துவமனை தயார் செய்வதற்காக, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், சணல் பைகளை பயன்படுத்த வேண்டும். சணல் பைகளில் மருத்துவமனை பெயர் பொறிக்கப்பட்டு மருத்துவமனை பணியாளர்கள், 250 பேருக்கும் வழங்க தயார் செய்யப்பட்டது. முதற்கட்டமாக செவிலியர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், மருத்துவமனையில், சோலார் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. மின் செலவை குறைக்க எல்.இ.டி. டியூப் லைட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளிகள் தங்கும் வார்டில், ஆக்ஸிஜன் அதிகமாக கிடைக்க வேண்டும் என வராண்டாவில் செடிகள் வளர்க்கப்படுகிறது. அறைகளில் பயன்படுத்தும் துணிகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவமனை வளாகம் முழுவதும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. சமையலறையில் இருந்து வெளியேறும் காய்கறி கழிவுகள், 'டம்பிங்' முறையில் குழி தோண்டி சேமித்து மக்க வைக்கப்படுகிறது.கழிவுகளில், 'ட்ரை, வெட்' மற்றும் உணவு கழிவு என தனியாக தரம் பிரிக்கப்பட்டும், மருத்துவ கழிவு தனியாக தரம் பிரித்தும் அகற்றப்படுகிறது. ஊசியை ஒரு முறை உபயோகப்படுத்தப்பட்டு 'நீடில் கட்' செய்து அகற்றப்படுகிறது. மருத்துவமனையில், 'அவுட்சோர்சிங்' ஊழியர்கள் வாயிலாக மருத்துவமனை வளாகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. கடந்த, 5 ஆண்டுகளில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காயகல்ப விருதுக்கு மாநில அளவில், மூன்று முறை முதலிடம் பெற்றது. ஒவ்வொரு முறையும் அதற்கான பரிசுத்தொகை பெறப்பட்டது. இம்முறையும் விருது பெற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, கூறினார்.