பிரதமரின் தொழில் மகள் நிகழ்ச்சி; 20ல் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு
கோவை; பிரதமர் மோடியின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, 20ம் தேதி மோடியின் தொழில் மகள் நிகழ்ச்சி, கோவை சத்தி ரோட்டில், 3.5 ஏக்கர் பரப்பிலான மைதானத்தில் நடக்கிறது. 1,500 மகளிருக்கு தொழில் துவங்குவதற்கான பொருட்கள் வழங்கப்படுகின்றன. தொழில் மகள் திட்டத்தில், மகளிர் துவங்கும் தொழிலுக்கு தேவையான தையல் இயந்திரம், கிரைண்டர், இடியாப்பம், இட்லி தயாரிக்கும் இயந்திரம், டீ பிளாஸ்க், பூக்கடைக்கான ஸ்டாண்ட், கார் வாட்டர் வாஷ் இயந்திரம், மொபைல் சர்வீஸ் கிட், இட்லி கடை செட், பிளம்பர், பியூட்டி பார்லர் கிட், பாப்கார்ன் மிஷின், எலக்ட்ரீஷியன் கிட் உள்ளிட்ட 15 தொழில்களுக்கான உபகரணங்கள் மற்றும் தொழில் துவங்குவதற்கான நிதி வழங்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் சிவ்ராஜ்சிங் சவுஹான், நிதின் கட்கரி, எல்.முருகன் ஆகியோரும், பா.ஜ.மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பா.ஜ.மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''பிரதமர் மோடியின் தொழில் மகள் நிகழ்ச்சி, 20ம் தேதி கோவையில் நடக்கிறது. 1,500 பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்பர். அவர்கள் 15 வகையான தொழில்கள் மேற்கொள்ள உதவிகள், மோடியின் 75வது பிறந்த நாள் விழாவில் வழங்கப்படும்,'' என்றார்.