உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடைச்சீட்டு இல்லாத வண்டிகளுக்கு சிறை; லாரி உரிமையாளர்கள் போராட்டம்

நடைச்சீட்டு இல்லாத வண்டிகளுக்கு சிறை; லாரி உரிமையாளர்கள் போராட்டம்

- நமது நிருபர் -கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் நடைச்சீட்டு (டிரான்சிட் பாஸ்) அவசியம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து, டிப்பர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கோவையில், 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் உள்ளன. இந்த லாரிகளில் குவாரிகளிலிருந்து எடுத்துச்செல்லும் கனிம வளங்களுக்கு, குவாரிகளிலிருந்து ஜி.எஸ்.டி., ரசீது வழங்கப்படுகிறது.அந்த ரசீதை வைத்துக்கொண்டு, எந்த முகவரியில் இறக்க வேண்டுமோ அங்கு அந்த கனிமவளத்தை இறக்கி விடுகின்றனர். வழியில் அதிகாரிகள் சோதனையிட்டால், அந்த ரசீதை காண்பித்து வருகின்றனர்.அதில் என்ன பொருள், எடை, அளவீடு, எத்தனை மணிக்கு லோடு ஏற்றப்பட்டது, ஏற்றப்பட்ட இடம், பொருட்கள் போய் சேரும் இடம், பயணிக்கும் துாரம், ஏற்றப்பட்ட பொருளுக்கு செலுத்தப்பட்ட தொகை, அதற்கான ஜி.எஸ்.டி.,தொகை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.இதை சோதனையிடும் அதிகாரிகள், சரிபார்த்து அனுமதித்து விடுவார்கள். தற்போது ஜி.எஸ்.டி.,பில் போதாது; மாநில அரசால் வழங்கப்படும் நடைச்சீட்டு (டிரான்சிட் பாஸ்) அவசியம் வைத்திருக்க வேண்டும் என்று, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நடைச்சீட்டு இல்லாத லாரிகளை சிறைபிடிப்பதாகவும், உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது கனிமவளங்கள் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுப்பதாகவும், நான்கு டிப்பர் லாரிகளை சிறைபிடித்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.

'ரூ.400 நடைச்சீட்டு ரூ.2,000க்கு விற்பனை'

கோவை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:குவாரிகளுக்குள் இயங்கும் லாரிகளுக்கு மட்டுமே, நடைச்சீட்டு நடைமுறையில் இருந்தது. அந்த நடைமுறையை குவாரிகளுக்கு வெளியே இருக்கும் லாரிகளுக்கும் நடைமுறைப்படுத்தினால் எப்படி?மொத்த நடைச்சீட்டையும் தனி ஒருநபரிடம் கொடுத்து விட்டு, அந்த நபரிடம் அதிக தொகையை கொடுத்து நடைச்சீட்டை வாங்கிக்கொள்ள சொல்லி, எங்களை அரசு அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.400 ரூபாய்க்கு கிடைக்கும் நடைச்சீட்டை 2,000 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னால், நாங்கள் எப்படி ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்களை விற்பனை செய்வது என்று தெரியவில்லை. இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு, சுமுகமான தீர்வை காண வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி