அவிநாசி ரோட்டில் ஏறுதளம் அமைப்பதில் சிக்கல்; ஐகோர்ட்டில் நெடுஞ்சாலைத்துறை மேல்முறையீடு
கோவை; கோவை - அவிநாசி ரோட்டில், பி.ஆர்.எஸ்., மைதானம் அருகே ஏறுதளம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறையில் இருந்து, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இரு வழித்தடங்களிலும் தலா இரண்டு இடங்களில் ஏறுதளங்கள், இறங்கு தளங்கள் அமைக்க வேண்டும். அதில், நீலாம்பூரில் இருந்து கோவை நகரை நோக்கி வரும்போது, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அருகே ஏறுதளம் அமைக்கும் பணி முடிந்து விட்டது.  ஏறுதளம், இறங்குதளம் 
பன்மால் சந்திப்பை கடந்ததும், ஏறுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல், பீளமேடு சுகுணா கல்யாண மண்டபம் முன், ஜி.டி.நாயுடு மியூசியம் அமைந்துள்ள பகுதியில் இறங்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.உப்பிலிபாளையத்தில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கிச் செல்லும் வழித்தடத்தில், பீளமேடு பி.எஸ்.ஜி., டெக் அருகே, ஏறுதளம் அமைக்கப்படுகிறது. பன்மால் எதிரே பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகே மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முன் இறங்குதளம் அமைக்கப்படுகிறது. இதில், பி.ஆர்.எஸ்., மைதானம் அருகே ஏறுதளம் அமைக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை மேல்முறையீடு
ரெசிடென்சி ஓட்டலுக்கு அருகே உள்ள, காலியிடத்துக்கு செல்ல வழியின்றி, துாண் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறி, அந்நில உரிமையாளர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். அதனால், ஏறுதளம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இம்மாத இறுதிக்குள், மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால், விடுபட்ட இடங்களில் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. மழை நீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தி, மழை நீரை நிலத்துக்குள் இறக்கும் வகையில், போர்வெல் போடப்படுகிறது. 120 இடங்களில் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கோர்ட்டில் வழக்கு
மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் இரும்பு கர்டர் துாக்கி வைக்கும் பணி துவங்க இருக்கிறது. ஒரே ஒரு இடத்தில் ஏறுதளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது; மேல்முறையீடு செய்துள்ளோம். இதர பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏறு தளம், இறங்கு தளம் பணிகள் முடியாவிட்டாலும், ஓடுதளம் பணிகளை முடிக்க முயற்சிப்போம்' என்றனர்.