குடிநீர் கேட்டு மக்கள்சாலை மறியல் போராட்டம்
அன்னுார்; குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குப்பேபாளையம் காந்தி நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் 10 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.இதையடுத்து, நேற்று காலை காந்திநகர் மக்கள், காலி குடங்களுடன், குப்பேபாளை யம் - வீரபாண்டி சாலையில் அமர்ந்து, மழையிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன், எஸ்.ஐ., சிவானந்தம் ஆகியோர் அங்கு சென்று பொது மக்களை சமாதானப்படுத்தினர். பொதுமக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் குடிநீர் குழாய் அடிக்கடி உடைக்கப்படுகிறது. உடைத்தவர்கள் யார் என்று எங்களிடம் சொன்னால் மட்டுமே, உடைப்பை சரி செய்து புதிய குடிநீர் குழாய் அமைத்து தருவோம், என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் 10 நாட்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கிறோம். கணேசபுரம் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம்,' என புகார் தெரிவித்தனர். உடனடியாக புதிய குடிநீர் குழாய் பொருத்த நடவடிக்கை துவங்கியது. இதை தொடர்ந்து, காந்திநகர் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.