ஆபத்தான மரங்களை வெட்ட பொதுமக்கள் வேண்டுகோள்
வால்பாறை, ; குடியிருப்பு பகுதியை சுற்றிலும் உள்ள ஆபத்தான மரங்களை வெட்ட வேண்டும் என வால்பாறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகைக்கு பின்பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பின் பின்பகுதியில், 30க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன.வால்பாறையில் மழை காலங்களில் காற்று வீசும் போது, இந்த மரங்கள் வீட்டின் மீது விழும் அபாயம் உள்ளது. இதனால், கக்கன்காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.மக்கள் கூறியதாவது:பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு பின் பகுதியில், நகராட்சி குடியிருப்பு, கக்கன்காலனி குடியிருப்பு, அங்கன்வாடி மையங்கள் உள்ளன. குடியிருப்பு பகுதியின் பின்பகுதியில், ஆபத்தான நிலையில் உள்ள மரங்களால், உயிருக்கும், உடமைக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.எனவே, வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை துவங்கும் முன்பாக, ஆபத்தான மரங்களை வெட்டுவதற்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்,' என்றனர்.