மேலும் செய்திகள்
காந்தவயல் செல்லும் சாலை, பாலம் மூழ்கும் அபாயம்
03-Jul-2025
மேட்டுப்பாளையம்; சிறுமுகை காந்தையாறு பாலம் தண்ணீரில் மூழ்கியதை அடுத்து, மோட்டார் படகு பயணம் துவங்கியது.மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பேரூராட்சியில், காந்தவயலுக்கும் லிங்காபுரத்துக்கும் இடையே காந்தையாறு ஓடுகிறது. இந்நிலையில் தமிழக அரசு, காந்தையாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட, 15 கோடியே, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பாலத்தை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும் என அறிவித்தது. ஆனால் இன்னும் பாலம் கட்டி முடிக்கப்படவில்லை.இந்நிலையில் தென்மேற்கு பருவ மழையால், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் காந்தையாற்றின் குறுக்கே, மக்கள் பயன்படுத்தி வந்த சிறிய உயர்மட்ட பாலம், தண்ணீரில் மூழ்கியது.தற்போது பாலத்தின் மீது மூன்று அடிக்கும், மேல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், பெண்கள் பாலத்தின் மீதும், சாலையிலும் தண்ணீரில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது பள்ளி மாணவ, மாணவிகளும், பெண்களும் ஆபத்தான நிலையில் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் மோட்டார் படகு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாரின் வேண்டுகோளின் பேரில், ஊட்டி பைக்காரா படகு இல்லத்தில் இருந்து லிங்காபுரத்திற்கு மோட்டார் படகை லாரியில் கொண்டு வந்தனர். லாரியில் இருந்து பொக்லைன் வாயிலாக காந்தையாற்றில் இறக்கி வைத்தனர். பின்பு சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், செயல் அலுவலர் மாலா ஆகியோர் மேற்பார்வையில், மோட்டார் படகு இயக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகவும், பொதுமக்களுக்கு குறைவான கட்டணத்தில் இயக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவித்தனர். இதையடுத்து காந்தையாற்றில் மோட்டார் படகு பயணம் துவங்கியது.
03-Jul-2025