ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொது குடிநீர் குழாய்
அன்னுார்; ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துண்டிக்கப்பட்ட, பொது குடிநீர் குழாய் மீண்டும் அமைக்கப்பட்டது. அன்னுார் பேரூராட்சியில், 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு 5,600 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. வீட்டு குடிநீர் இணைப்பு இல்லாதவர்களுக்காக பள்ளிவாசல் வீதி, கடைவீதி மற்றும் ஓதிமலை ரோட்டில் பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பவானி ஆற்று நீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், திருப்பூர் முதலாம் குடிநீர் திட்டம் துவங்கி, 35 ஆண்டுகள் முடிந்ததாலும் குழாய்கள் அடிக்கடி பழுதானதாலும் அந்தத் திட்டத்தில் அமைக்கப்பட்ட அன்னுார் நகரில் 16 மணி நேரம் குடிநீர் வழங்கி வந்த மூன்று பொது குழாய்கள் துண்டிக்கப்பட்டன. மீண்டும் புதிதாக பொது குடிநீர் குழாய் அமைக்க பொதுமக்கள் கோரி வந்தனர்.இதையடுத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்றுமுன்தினம், அன்னுார் பள்ளிவாசல் வீதியில், புதிதாக பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் அதை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 'தேவைப்படும் இடங்களில் புதிதாக பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும்,' என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.