வார்டு சபை கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி; அதிகாரிகள் திணறல் பாதியில் ரத்தானதால் பரபரப்பு
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி சார்பில் நடந்த ஆறாவது வார்டு சபை கூட்டம் பொதுமக்களின் காரசார விவாதத்தால் ரத்து செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் வார்டு சபை கூட்டம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை கேட்டு, அறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அந்தந்த பகுதிகளில் உள்ள பேரூராட்சி சார்பில் வார்டு சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட வார்டுகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளன. நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் ஆறாவது வார்டு செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் வார்டு சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு, ஆறாவது வார்டு கவுன்சிலர் சுமதி ரகுபதி தலைமை வகித்தார். பேரூராட்சி சார்பில் அலுவலர் செல்வ ஜெயந்தி, வரி வசூலர் ராமலிங்கன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். ஆறாவது வார்டுக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் கான்கிரீட் சாக்கடை கால்வாய் இடிந்து விழுந்து, நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பலமுறை பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது என, காந்தி நகர் பொதுமக்கள் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர்கள் சங்க வடக்கு பகுதி பொறுப்பாளர் கல்யாண சுந்தரம் பேசுகையில், வார்டு சபை கூட்டம் நடப்பதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. வார்டு மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் அதிகாரம் உள்ள பேரூராட்சி தலைவரோ, செயல் அலுவலரோ அல்லது சுகாதார அலுவலரோ கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. வரி வசூல் செய்யும் பணியில் அக்கறை காட்டும் பேரூராட்சி நிர்வாகம், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அக்கறை காட்டுவதில்லை என்றார். பாலாஜி நகர் சண்முகம் பேசுகையில், ரோட்டில் குழி தோண்டிய மண் குவியலாக கிடக்கிறது. அதை அகற்ற எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்.இதையடுத்து திரண்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள்எழுப்பிய கேள்விகளுக்கு பேரூராட்சி அலுவலர்கள், பதில் அளிக்க முடியாமல் திணறினர். பொதுமக்கள், பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் தலைமையில் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும். அதுவரை கூட்டம் நடத்தக்கூடாது என, தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து வார்டு சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலர்கள் இருவரும் கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.