உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கான்கிரீட் ரோடு போடுங்க : பொதுமக்கள் வலியுறுத்தல்

கான்கிரீட் ரோடு போடுங்க : பொதுமக்கள் வலியுறுத்தல்

கோவை: மாநகராட்சி, 46வது வார்டுக்கான சிறப்பு கூட்டம், ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மீனா தலைமை வகித்தார். உதவி பொறியாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னையை பிரதானமாக மக்கள் முன்வைத்தனர். தொடர்ந்து, மழைநீர் வடிகால் தேவை, வரியினங்களில் பெயர் மாற்றம் குறித்த மனுக்களை அளித்தனர். கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். 48வது வார்டுக்கான கூட்டம், சித்தாபுதுார் ஐயப்பா சேவா சங்கத்தில் நடந்தது. மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தார் ரோடு விடுபட்ட இடங்களில் சிமென்ட் கான்கிரீட் ரோடு போட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. சி.கே., காலனியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரினர். கவுன்சிலர் பிரபா பேசுகையில்,''சி.கே., காலனி பகுதி தாழ்வாக இருப்பதால் மழைநீர் 'பம்பிங்' செய்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, பாதாள சாக்கடை திட்டத்தில் பெரிய குழாய் பதிக்க வேண்டியுள்ளது. ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள கால்வாயில் தேங் கும் தண்ணீரை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

'ஞாயிறு குப்பையை திங்களன்று கொடுங்க'

47வது வார்டுக்கான சிறப்பு கூட்டமும், ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் நடத்தப்பட்டது; 79 பேர் பங்கேற்றனர். நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெருவிளக்கு பராமரிப்பு சில வாரங்களாக படுமோசமாக இருப்பதாக பலரும் குற்றம் சுமத்தினர். வீடு வீடாக வந்து குப்பை சேகரிக்க ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் வருவதில்லை என கூறினர். அதற்கு, ஞாயிறன்று துாய்மை பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் குப்பையை வீட்டிலேயே தரம் பிரித்து சேகரித்து வைத்து விட்டு, மறுநாள் வரும்போது கொடுக்க வேண்டும்; பொது இடத்தில் வீசக்கூடாது என, சுகாதாரப் பிரிவினர் பதிலளித்தனர். நால்வர் லேஅவுட் பகுதியில், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் செல்வதை தடுக்க சிறுமேம்பாலம், ஜி.பி.எம். நகர் குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி