உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

காரமடை ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

மேட்டுப்பாளையம்: காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா, நேற்று நடந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை ரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழாக்கள், வெகு விமர்சையாக நடைபெறும். நேற்று புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 3:15 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. 4:00 மணிக்கு உற்சவர் அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தின் உள்ளே உலா வந்து, கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை வழிபட்டனர். கோவில் முன் அமர்ந்திருந்த தாசர்களுக்கு, பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கறி படைத்து வழிபட்டனர். பின்பு அவர்கள் வழங்கிய உணவுப் பொருளை பக்தர்கள் பெற்றுச் சென்றனர். அக்.2ம் தேதி கோவிலில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 4ம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது. 5ம் தேதி புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை விழாவும், அக்.,12ம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், சரஸ்வதி பூஜையும், 13ம் தேதி விஜயதசமி பூஜையும் நடைபெற உள்ளது. அன்று இரவு, குதிரை வாகனத்தில் அரங்கநாதப் பெருமாள் எழுந்தருளி, அம்பு விடும் விழா நடைபெறும். 19ம் தேதி புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை விழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, அறங்காவலர் குழுத் தலைவர் தேவ் ஆனந்த் மற்றும் அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவஹர், குணசேகரன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !