கோவை : கோடையில் தேவை அதிகரித்துள்ளதால் கேன் குடிநீரின் விலை பல மடங்கு உயர்ந்து, பொதுமக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இத்தொழிலில், ஏராளமான நிறுவனங்கள் களமிறங்கி விட்டதால், ஆளாளுக்கு ஒவ்வொரு விலை நிர்ணயிக்கின்றனர். சரியான விலையை நிர்ணயித்து, முறைப்படுத்த அரசு முன் வர வேண்டும்.தமிழகத்தில் கடந்தாண்டுகளில், இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.கோவையிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், நீராதாரங்களின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால், கோவையில் குடிநீர் வினியோகம், தற்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை என, மாறியுள்ளது.குடிநீர் தேவைக்காக பொதுமக்கள், கேன் குடிநீரை பயன்படுத்த துவங்கியுள்ளதால், தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சில கேன் குடிநீர் விற்பனையாளர்கள் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், அனைத்து வகையான கேன் குடிநீர் தயாரிப்பில் 110 நிறுவனங்களும், கேன் குடிநீர் விற்பனையில், 485 டீலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.வழக்கமாக, ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த, கேன் குடிநீரின் விலை, ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளகியுள்ளனர். வரும் நாட்களில் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, சப்ளை செய்பவர்கள் வயிற்றில் புளியை கரைக்கின்றனர்.தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவர் சாகுல் ஹமீது கூறியதாவது:கோவை மாவட்டத்தை பொறுத்தவரைசுத்தகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் பொள்ளாச்சி, கோவையில் செயல்பட்டு வருகின்றன. சாதாரண நாட்களில், ஒரு நிறுவனம் தினமும், 500 கேன்கள் வரை விற்பனை செய்யும்.தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது ஒரு நிறுவனம் சராசரியாக, 1,000 கேன்கள் வரை தயாரித்து விற்பனை செய்கிறது. சங்கம் சார்பில், பொதுமக்களுக்கு, 20 லிட்டர் கேன் விலை, ரூ.30 - 45 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதாவது, தரைதள வீட்டுக்கு ரூ.30, முதல் மாடிக்கு, ரூ.35 என, விலை நிர்ணயிக்கப்படுகிறது. திருமண மண்டபங்களுக்கு இது, ரூ.25 என நிர்ணயிக்கப்படுகிறது.கடந்தாண்டு, கேன் குடிநீரின் விலையை ரூ.5 உயர்த்தினோம். ஆனால், இந்தாண்டு பொதுமக்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக, விலையை உயர்த்த கூடாது என, முடிவெடுத்து அதை சங்க உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளோம்.எங்கள் சங்க உறுப்பினர்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே, விற்பனை செய்கின்றனர். சங்கத்தில் உறுப்பினராக இல்லாத சிலர், விலையை உயர்த்தி இருக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.கேன் குடிநீர் விற்பனையாளர்கள் அனைவரையும், சங்கத்தில் உறுப்பினராக்கி சீரான விலையில், குடிநீர் சப்ளை செய்வதை, சங்க நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். சங்கத்தினருடன் பேசி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில், கேன் குடிநீர் கிடைக்கச் செய்ய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.