உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தகுதிச்சான்று கட்டண உயர்வு: ஆட்டோ ஸ்டிரைக்

 தகுதிச்சான்று கட்டண உயர்வு: ஆட்டோ ஸ்டிரைக்

பொள்ளாச்சி: 'மத்திய அரசின் தகுதிச்சான்று கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்,' என வலியுறுத்தி பொள்ளாச்சியில் நேற்று ஆட்டோ ஸ்டிரைக் நடந்தது. மத்திய அரசு தகுதிச்சான்று பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, பொள்ளாச்சி அனைத்து ஆட்டோ - ரிக் ஷா சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. அதன்படி, நேற்று பொள்ளாச்சி பகுதியில், காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை ஆட்டோக்கள் இயங்கவில்லை. பள்ளி செல்லும் மாணவர்கள், பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை செல்லும் பயணியர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒரு சில ஆட்டோக்கள் இயங்கியதை, கூட்டு நடவடிக்கை குழுவினர், தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். அதன்பின், ஆட்டோவில் பயணியர் இருந்ததால் அனுமதித்தனர். ஆட்டோ ஸ்டிரைக்கால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பொள்ளாச்சி அனைத்து ஆட்டோ - ரிக் ஷா சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கூறியதாவது: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி, கிராமங்கள் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. இது வரை ஆட்டோக்கள் தகுதிச்சான்று கட்டணமாக, 1,500 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக இருக்கும். அதனுடன் பசுமை வரி சேர்த்து செலுத்தி வந்தோம். தற்போது, ஒவ்வொரு வாகனங்களின் தயாரிப்பு ஆண்டுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு, மத்திய அரசு தகுதிச்சான்று கட்டணம் பல மடங்காக உயர்த்தியுள்ளது.குறைந்தபட்சம், 5,500 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஆட்டோவில் பயணியருக்கான கட்டணம் மட்டும் இன்னும் உயர்த்தப்படவில்லை. மாநில அரசும் இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது, தகுதிச்சான்று கட்டண உயர்வால் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்படும். இது குறித்து அரசு பரிசீலனை செய்து கட்டண உயர்வை குறைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி