கோவை:'கோவையில் விதிமுறை மீறி செயல்படும் கல்குவாரிகள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். சீல் வைத்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஷர்மிளா, மனுக்களை பெற்று, துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார்.அப்போது, விவசாயிகள் பேசியதாவது:தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி: விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் செயல்படுகின்றன. சில இடங்களில் லைசென்ஸ் காலாவதியாகியும் தொடர்ந்து இயங்குகின்றன. விதிமுறையை மீறி, ஆழமாக வெட்டி எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.மொபைல் போனில் விளம்பரம் பார்த்தால் தினமும் ரூ.5 முதல் ரூ.1,800 வரை சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகர விளம்பரம் செய்து, ஏராளமானோரிடம் மோசடி செய்திருக்கின்றனர். ஏமாற்றும் நிறுவனங்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் செந்தில்குமார்: சங்கனுார் பள்ளத்தில் உள்வட்டச்சாலை அமைக்க, மத்திய அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கியிருந்தது; அத்தொகை என்னவாயிற்று. சின்னவேடம்பட்டிக்கு நீர் வரும் சிற்றோடைகளை சீரமைக்க வேண்டும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொது செயலாளர் பெரியசாமி: காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதால், கேரளாவை போல் சுட்டுக்கொல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பூமியை சுற்றிலும் ஐந்தடிக்கு டைமண்ட் வலை அமைக்க மானியம் வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி: விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வழுக்குப்பாறை மற்றும் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் செயலர் இல்லாததால், கடன் வழங்க மறுக்கின்றனர்.சொக்கனுார் கிராமத்தில் விதிமுறை மீறி கல்குவாரி அனுமதி தரப்பட்டிருக்கிறது. அதை ரத்து செய்ய ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு ஏற்ப, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர். கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு 'சீல்' வைத்து, உரிமத்தை ரத்து செய்ய, கனிம வளத்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும்.பல இடங்களில் தண்ணீர் இல்லாத கிணறுகள் மூடப்படாமல் இருக்கின்றன. இவற்றில் மாசற்ற திடக்கழிவு மண்ணை கொட்டி மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வழுக்குப்பாறை கிராமத்தில் மேற்கு நோக்கி கேரளா செல்லும் கடுவன்துறை ஆற்றில் புதிதாக தடுப்பணை அமைத்தால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன்: கடந்த நான்கு ஆண்டுகளில், 56 செப்பு கம்பி திருட்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கூடலுார், பிளிச்சி, இடிகரை கிராமங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பது; பவுண்டரி கழிவு மண் கொட்டுவதால், காற்று, நிலம், நீர் மாசடைந்து வருகிறது.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடாசலம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
'எல்லைக்கல் நடுங்கள்'
விவசாயிகள் மேலும் கூறுகையில், 'புளிய மரம், ஜாதிக்காய், பாக்கு மரக்கன்றுகள் மானியத்தில் வழங்க வேண்டும். பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட வாய்க்காலில் முதல் மண்டல பாசன கால்வாய் துார்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும். நீர் வழிப்பாதையை சர்வே செய்து எல்லைக்கற்கள் நட வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்' என்றனர்.