பிரிவினை சித்தாந்தத்தை பேசும் ராகுல் காங்கிரசை வழிநடத்துவது பேரபாயம்
கோவை; பிரிவினை சித்தாந்தத்தை பேசும் ராகுல், காங்., கட்சியை வழிநடத்துவது பேரபாயம் என்று விமர்சித்துள்ளார், பா.ஜ., எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன். அவர் கூறியதாவது:பல்கலைக்கழக மானியக் குழுவின்(யு.ஜி.சி.,) புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி ஜந்தர்மந்தரில் நேற்று தி.மு.க., நடத்திய போராட்டத்தில் பேசிய, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகள் வெறும் கல்வி சார்ந்த நகர்வல்ல; அது தமிழகத்தின் வளமான மரபின் மீதும், இந்தியக் கூட்டாட்சியின் அடிப்படை மீதும், தொடுக்கப்படும் தாக்குதலாகும்.இந்தியா என்பது நாடல்ல; மாநிலங்களின் ஒன்றியம் என்பது தி.மு.க.,வின் பிரிவினை சித்தாந்தம். அதையே ராகுல் தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார்.'தேசம் முதலில்' என்பதுதான், பா.ஜ.,வின் கொள்கை. தி.மு.க.,வின் பிரிவினை சித்தாந்தத்தை முன்மொழிபவர், தேசிய கட்சியான காங்.,ஐ வழிநடத்தும் பொறுப்பில் இருப்பது பேரபாயம்.மொழி, மதம், இனம், ஜாதி, வேறுபாடுகளை கடந்து, அனைவரும் இந்தியர்கள் என்று உணர வேண்டும் என்பதற்காக, நுாறாண்டாக செயல்படும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., மக்களை இணைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., பணி.ஆனால், 'வட மாநிலங்கள் - தென் மாநிலங்கள்', 'மாநில மொழிகள்- இந்தி', 'இந்துக்கள் - சிறுபான்மையினர்' என மக்களைப் பிரித்து வருகிறார் ராகுல். எதிர்கட்சித்தலைவருக்கு உகந்ததல்ல.இவ்வாறு, வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.