கூட்டுறவு, தனியார் உர விற்பனைநிலையங்களில் திடீர் ஆய்வு
பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையம் அருகே கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் வேளாண் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தடை இல்லாமல் உரங்கள் கிடைக்க வேண்டும். அரசு நிர்ணயம் செய்த விலையில் விற்பனை செய்யப்பட வேண்டும். இணை பொருட்கள் வாங்குமாறு விவசாயிகளை வற்புறுத்தக் கூடாது. உர விற்பனை முறையை கருவி வாயிலாக ஆதார் எண் கொண்டு விற்பனை செய்ய வேண்டும். பதுக்கல் மற்றும் விவசாயம் இல்லாத பயன்பாட்டுக்கு உரங்களை பயன்படுத்தக்கூடாது என்பதை கண்காணிக்க வேண்டும் என, தமிழ்நாடு வேளாண் இயக்குனர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, கோவை மாவட்ட உர கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் சக்திவேல் தலைமையில், 5 வேளாண் அலுவலர்கள் கொண்ட ஆய்வு குழுவினர் கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையத்தில் உள்ள சக்தி பெர்டிலைசர் கம்பெனி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் நேற்று காலை, 11:00 மணியிலிருந்து மாலை, 5:00 மணி வரை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து, வேளாண் உதவி இயக்குனர் சக்திவேல் கூறுகையில், ராபி பருவதற்கான பயிர் சாகுபடி நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் வாயிலாக தடையின்றி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக கோவை மாவட்டத்தில் 10,840 மெட்ரிக் டன் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவை ரயில் வாயிலாக கோவை மாவட்டத்திற்கு நேரடியாக கொண்டு வந்து ஸ்டாக் வைக்கப்பட்டு, பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஆய்வின்போது முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உர கட்டுப்பாடு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.