அதிவிரைவுப்படை வீரர்கள் கள ஆய்வு
கோவில்பாளையம்; நவீன ஆயுதங்களுடன், அதிவிரைவு படை வீரர்கள் கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கள ஆய்வு செய்தனர். வெள்ளலூரில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், ஒரு பிரிவான, அதிவிரைவு படை முகாம் உள்ளது. இங்கு 1,200க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். கலவரம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்கள், அவ்வப்போது ஒத்திகை மற்றும் கள ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று கள ஆய்வு செய்தனர். இதில் அதிவிரைவு படை டெபுடி கமாண்டன்ட் சிந்து தலைமையில், 130 வீரர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர். கலவரம் மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் போலீசார் உடன் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது என ஆலோசித்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல, எவ்வளவு நேரம் ஆகிறது. விரைவில் செல்வதற்கான வழிகள் குறித்தும் ஆலோசித்தனர். கள ஆய்வின் போது 'மல்டி செல் லாஞ்சர்' (எம்.எஸ்.எல்.) எனப்படும் நவீன ஆயுதங்களை வீரர்கள் ஏந்தி வந்தனர். இதுகுறித்து வீரர்கள் கூறுகையில்,' இறப்பு ஏற்படாதபடி, எனினும் பலத்த காயம் ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் அதிக அளவில் அதிவிரைவு படையிடம் உள்ளன,' என்றனர்.