| ADDED : பிப் 14, 2024 10:49 PM
உடுமலை -உடுமலை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், லட்சார்ச்சனை சிறப்பு பூஜை நேற்று துவங்கியது.எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடுவது போல, சூரியனுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் நாள் ரத சப்தமி நன்னாளாகும். உத்திராயண அமாவாசைக்கு பின்வரும் ஏழாவது நாள் ரதசப்தமி என்று போற்றப்படுகிறது.அவ்வகையில், உடுமலை, நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், இவ்விழாவையொட்டி விஷ்ணு சகஸ்ரநாம லட்சார்ச்சனை சிறப்பு வழிபாடு, நேற்று முதல் துவங்கியது.நேற்று காலை, 7:00 மணிக்கு மகாசங்கல்பம், வாசுதேவ புண்யாகம், ரக் ஷாபந்தனம் நடந்தது. மதியம், 12:30க்கு சிறப்பு அலங்காரத்துடன், பூமிநீளா நாயகி சமேத சவுந்திரராஜ பெருமாள் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.தொடர்ந்து மாலையில் விஷ்ணு சகஸ்ரநாம ேஹாமம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இன்று காலை, 7:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம ேஹாமம் மற்றும் லட்சார்ச்சனை பூர்த்தியாகிறது.விழாவில் நாளை (16ம் தேதி) பகல், 12:00 மணிக்கு சவுந்திரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம், அபிேஷகம், திருக்கல்யாணம் நடைபெறுகிறது.