உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனை பிணவறையில் ரூ.81 லட்சத்தில் குளிர்பதன வசதி

அரசு மருத்துவமனை பிணவறையில் ரூ.81 லட்சத்தில் குளிர்பதன வசதி

கோவை: கோவை அரசு மருத்துவவமனை வளாகம், 18 ஏக்கரில் அமைந்திருக்கிறது. அவசர சிகிச்சை, மகப்பேறு, புற்றுநோய், மனநலம், எலும்பு முறிவு உள்ளிட்ட 31 துறைகள் செயல்படுகின்றன. உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் நாளொன்றுக்கு 9,000 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மாதந்தோறும், 1.40 லட்சம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். புதிதாக மட்டும், 11 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சேர்க்கப்படுகின்றனர். பல்வேறு சூழல்களில், சராசரியாக மாதந்தோறும், 600 இறப்பு நிகழ்கிறது. இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக வைத்திருக்க பிணவறை வசதி இருக்கிறது. இருப்பினும், குளிர்பதன வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் தேவைப்படுகின்றன. டீன் கீதாஞ்சலி கூறுகையில், ''கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில், குளிர்பதன கிடங்கு வசதி மேம்படுத்தும் பணி, ரூ.81 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. நாளொன்றுக்கு, 10 முதல் 13 பிணக்கூறு ஆய்வு செய்யப்படுகிறது. குளிர்பதன கிடங்கு வசதி கூடுதலாக தேவையுள்ளதால், இப்பணிகள் நடக்கின்றன. இதில், 36 லட்சம் ரூபாய், மின்சாரம் சார்ந்த பணிக்கே செலவிடப்படும். இறந்தவர்களின் உடலை பெறுபவர்களுக்கு, காத்திருப்பு கூடாரம் அமைக்கப்படும், '' என்றார்.

'பார்க்கிங் வசதி மேம்படுத்தப்படும்'

அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சரவணப்பிரியா கூறுகையில், ''அரசு மருத்துவமனையில் தற்போது, சாலை, கழிவுநீர் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும், எந்த இடங்களில் நிறுத்தக்கூடாது என வரையறை செய்ய உள்ளோம். ஆங்காங்கே நிறுத்துவதால், பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, சாலை வசதி செய்ததும் 'பார்க்கிங்' பகுதி முறைப்படுத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ