விரைவு தபாலுடன் பதிவு தபால்: அக்., 1 முதல் புது மாற்றம் அமல்
கோவை: பதிவு தபால் சேவை, விரைவு தபால் சேவையுடன், அக்., 1ம் தேதி இணைக்கப்படுகிறது என, தபால் துறை தெரிவித்துள்ளது. கடந்த 1849ம் ஆண்டு நவ., மாதம் தபால் துறையில் பதிவு தபால் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வரை, நீதிமன்றம், வங்கி மற்றும் அரசு துறை சார்ந்த கடிதங்கள், பதிவு தபால்கள் வாயிலாக பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகின்றன. மிக முக்கியமான ஆவணங்கள், சான்றுகளை அனுப்ப, வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக, பதிவு தபால்கள் தான் இருக்கின்றன. செப்., முதல் தேதியில் பதிவு தபால் சேவை ரத்து விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சேவைகளை ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்த, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினர் மத்தியில் இதற்கு எதிர்ப்பும் எழுந்து வருகிறது. ஆங்காங்கே, தபால் நிலையங்களில் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. பதிவுத் தபால் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் விரைவுத் தபாலிலும் கடைபிடிக்கப்படுமா என்பன போன்ற பல கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. இந்நிலையில், வரும் அக்., மாதம் முதல் தேதி முதல் இந்நடைமுறை அமலுக்கு வரும் என, தபால் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டமைப்பு, வளர்ந்து வரும் சந்தை தேவைகள் மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளுடன், இந்த சேவைகளை சிறப்பாக இணைப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளதாகவும், இதற்காக கட்டணங்கள் மற்றும் சேவை விதிமுறைகள், அவ்வப்போது துறையால் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.