| ADDED : ஜன 29, 2024 11:09 PM
வால்பாறை:வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில், ஆக்கிரமிப்பு கடைகளால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.வால்பாறை நகரின் மத்தியில் புதுமார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு நகராட்சிக்கு சொந்தமான, 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வாரம் தோறும் சந்தை நாளான ஞாயிற்றுக்கிழமை நாளில், மக்கள் கூட்டம் அலைமோதும்.கடந்த சில ஆண்டுகளாக, வால்பாறை மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமலும், மக்கள் நடந்து செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.வால்பாறை மார்க்கெட் பகுதியில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களும், எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக்கொண்டு, நகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆக்கிரமிப்பு அகற்றுவது கைவிடப்படுகிறது.மக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில் பூ மார்க்கெட் முதல், மீன் மார்க்கெட் வரை, நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, நடைபாதையை ஆக்கிரமித்தும், ரோட்டை ஆக்கிரமித்தும் அதிக அளவில் கடைகள் வைக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு, ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன.இதனால், நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள், போதிய வருமானம் இல்லாமல், மாத வாடகை செலுத்த முடியாமல், நகராட்சியை கண்டித்து அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.எனவே, வால்பாறை நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, அவர்களுக்கும் வாடகை அடிப்படையில் மார்க்கெட் பகுதியில் புதியதாக கடைகளை கட்டி கொடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.