உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

தற்காலிக பஸ் ஊழியர்கிட்டயும் அதிகாரிக கேட்குறாங்க 'கவனிப்பு'

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ் ஊழியர்கள் கூட்டமாக நின்று, 'அவங்க தலைதெறிக்க ஓடுறாங்க...' என, பேசிக்கொண்டிருந்தனர். அவங்க உரையாடலை கவனித்தேன். அதிலிருந்து...கடந்த ஜன., மாசம், அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டத்துல, ஒப்பந்த அடிப்படையில, தற்காலிகமாக டிரைவர், கண்டக்டர்கள பணியமர்த்துனாங்க. அவர்களுக்கு, ஒரு ஷிப்டுக்கு, (8 மணி நேரப்பணி) ஜி.எஸ்.டி., நீங்கலாக டிரைவருக்கு 1,041 ரூபாயும், கண்டக்டருக்கு 1,030 ரூபாயும் சம்பளமா நிர்ணயிச்சாங்க.பொள்ளாச்சி கிளை 1ல் - 22 கண்டக்டர்கள், கிளை 2ல்- 11 கண்டக்டர்கள், கிளை 3ல் - 3 கண்டக்டர்கள், வால்பாறை கிளையில் 7 கண்டக்டர்கள் நியமிச்சாங்க. அவர்களுக்கு, 26 டியூட்டி மற்றும் 4 நாட்கள் லீவு அனுமதிச்சிருக்காங்க.ஆனா, தற்காலிக ஊழியர்கள், இங்கு பணிக்கு வர தயக்கம் காட்டுறாங்க. ஏன்னா, தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு, 35 ஆயிரம் ரூபா டெபாசிட் செலுத்தினாலும், கணக்கு இல்லாமல், 15 ஆயிரம் ரூபாய்; பணிபுரியும் கிளையில் 5 ஆயிரம் ரூபாயும் 'கவனிப்பு' செலுத்தணும்னு, வாய்மொழி உத்தரவே போட்டிருக்காங்க.இதுமட்டுமில்லாம, எதிர்காலத்துல பணி நிரந்தரம் செய்ய மாட்டாங்கனு தெரிஞ்சதால, அவங்க தலைதெறிக்க ஓடுறாங்க. புதுசாவும் ஆள் தேர்வு பண்ண மாட்டாங்க, தற்காலிகமா வர்றவங்க கிட்டயும் லஞ்சம் கேட்குறாங்க. அப்புறம் எப்படி அரசு பஸ்சை இயக்கறதுனு தெரியலனு பேசிக்கிட்டாங்க.

நகராட்சியில ஊழல் நடக்குதுதேர்தலில் எதிரொலிக்க போகுது!

வால்பாறை நகராட்சியில், என்ன நடக்குதுனே தெரியலை என, இரண்டு தொழிலாளர்கள் டீ கடையில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் உரையாடலை கவனித்தேன்.நகராட்சி தேர்தலின் போது, தி.மு.க.,காரங்க கொலுசும், பணமும் கொடுத்து ஜெயிச்சாங்க. ஆனா, இப்ப என்னடான்னா வார்டுல ஒரு வேலையும் நடக்கமாட்டேங்குது. கவுன்சிலர்கள் அடிக்கடி அவுங்க சுய நலத்துக்காக மன்றக்கூட்டத்தை புறக்கணிக்கிறாங்க. இத கட்டுப்படுத்த முடியாத நிலையில, தி.மு.க., நகர செயலாளர் கட்சி தலைமைக்கும் புகார் அனுப்பியிருக்காரு.இது ஒரு புறம் இருக்க, அ.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்புல இருக்கற 'பொன்னான' நிர்வாகி ஒருத்தரு, அவரோட வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்ல, 'வால்பாறை நகராட்சியில பல கோடி ரூபா பணம் இருந்தும், எந்த பிரயோஜனமும் இல்ல, வளர்ச்சிப்பணிகள் செய்யாமலேயே, மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கிறாங்க.''இதை இப்போ பேசினா, போலீசில புகார் கொடுத்து ஜெயில்ல அடைச்சிடுவாங்க. சட்டசபை தேர்தல் வரட்டும், நகராட்சியில நடக்கும் ஊழல்கள ஆதாரத்தோட பேசுவேன்னு,' சொல்லியிருக்காரு.இப்படியே போனா, சட்டசபை தேர்தல்ல, தி.மு.க.,காரங்க ஓட்டு கேட்க வார்டுக்குள்ள போக முடியாது போலிருக்குனு, பேசிக்கிட்டாங்க.

கட்டுமான பொருள் விலை எகிறியதுபணிகள் எல்லாம் பாதியில நிற்குது

கிணத்துக்கடவு யூனியன் ஆபீஸ்க்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு ரெண்டு அதிகாரிகள் கான்ட்ராக்ட் சம்பந்தமா ஏதோ பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னென்ன காது கொடுத்து கேட்டேன்.போன மாசம் நடந்த கல்குவாரி உரிமையாளர்கள் தற்காலிக ஸ்டிரைக்கால், கட்டுமான பொருட்கள் விலை அதிகமாயிருச்சு. இதனால, நிறைய பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கு.ஒன்றிய அலுவலகத்துல கட்டடப்பணிகள ஒப்பந்த முறையில் எடுத்து செய்யற கான்ட்ராக்ட்காரங்க வேலை செய்ய முடியாம தடுமாறுறாங்க.இது மட்டுமா, கலைஞர் கனவு இல்லம் திட்டத்துல வீடு கட்டறவங்களும் சிரமப்படுறாங்க. ஒரு சிலர் வீடு கட்டும் பணிய பாதியிலேயே நிறுத்திட்டாங்க. இதனால, வீட்டுக்கு உண்டான நிதிய விடுவிக்க முடியல. இதுனால, கான்ட்ராக்டர்கள் பெருசா எந்த வேலையும் டெண்டர் எடுக்கல.போதாததுக்கு, போன மாசத்த விட இந்த மாசம் சிமென்ட் விலையும் மூட்டைக்கு, 70 முதல் 75 ரூபாய் வரைக்கும் அதிகமாயிடுச்சு. இப்படியே போனா, யாரும் வீடும் கட்ட முடியாது, வளர்ச்சி பணிகளும் நடக்காதுனு, பேசிக்கிட்டாங்க.

ஆசிரியர்கள ஊக்குவிக்குமா கல்வித்துறைபாரபட்சம் வேண்டாம்னு சொல்லுறாங்க

உடுமலையில, பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விசாரிக்க சென்ற போது, கல்வித்துறையின் மீதான அதிருப்தியை, ஆசிரியர்கள் வெளிப்படுத்தினாங்க. கல்வி துறையில என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.அரசு பள்ளிகள்ல ஒவ்வொரு வகுப்புக்கும், நூறு சதவீதம் எடுக்கிற ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்புல பாராட்டு சான்றிதழ் வழங்கராங்க. அது நல்ல விஷயம்தான். ஆனா, அதுல இருக்கற நடைமுறை சிக்கலால தான், அதிக மாணவர்கள தேர்ச்சி பெற செய்ய முடியல. மற்ற ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கறதில்ல.10 மாணவர்கள் இருக்கும் பள்ளியில அனைவரையும் தேர்ச்சி பெற செய்தால் அவங்களுக்கு விருது கிடக்குது. ஆனா, 50 மாணவர்கள் இருக்கிற வகுப்பில் ஒருத்தரு தேர்ச்சி பெறாம போயிட்டாலும், அந்த வகுப்பு ஆசிரியரோட உழைப்புக்கு அங்கீகாரம் கிடைகிறதில்ல. இந்த நடைமுறையை மாற்றினாதான் ஆசிரியர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும்.அரசு பள்ளில, மாணவர்களை 'பில்டர்' பண்ணி சேர்ப்பதில்ல. அதனால, எல்லாரையும் 'பாஸ்' பண்ண வைக்கறதுல சிரமம் இருக்கு. அதனால, அனைத்து ஆசிரியர்களையும் கல்வித்துறை ஊக்குவிக்கணும். இந்த பிரச்னைல கல்வித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி, ஆசிரியர்களோட மனஉளைச்சலை போக்கணும்னு, சொன்னாங்க.

இஷ்டம் போல, கணக்கு எழுதிகுப்பையிலும் நடக்குது ஊழல்

உடுமலை நகராட்சி ஆபீஸ், ஓய்வு பெற்ற சுகாதார பணியாளர் ஒருத்தரை சந்தித்தேன். குப்பையிலும் ஊழல் நடக்குதுனு, ஆதங்கப்பட்டு பேசினார். அவர் கூறியதில் இருந்து...உடுமலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்துல, வீடு தோறும் துாய்மை பணியாளர்கள் வாயிலா குப்பை சேகரிக்கப்படுது. இந்த பணியில, 350க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்க இருக்கறாங்க. குப்பை சேகரிக்க தள்ளுவண்டி, பிளாஸ்டிக் டிரம் கொடுத்திருக்காங்க.பல ஆண்டுகளுக்கு முன் வழங்கிய இந்த வண்டிகள முறையா பராமரிக்காம, பழுதடைந்தும், உடைஞ்சும் இருக்கு. அதனால, அந்த வண்டிய தள்ள முடியாம, துாய்மை பணியாளர்கள் சிரமப்படுறாங்க.குப்பை சேகரிக்க வழங்கிய பிளாஸ்டிக் டிரம்களும் உடைஞ்சு, பயன்படுத்த லாயிக்கற்றதா இருக்கு. இதுல, எப்படி மக்கும், மக்காத குப்பை வாங்குவாங்கனு தெரியல. இதுக்காக கொடுத்த, பேட்டரி வாகனங்கள், லாரிகள் எல்லாமே பழுதடைந்து இருக்கு. பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்கறதில்ல. நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிக இந்த பிரச்னைகளை எல்லாம் கண்டுக்கறதே இல்ல.மக்களிடம் இருந்து, திடக்கழிவு மேலாண்மைக்குனு கட்டணம் வசூல் பண்ணுற நகராட்சி அதிகாரிகள், துாய்மை பணிக்கு ஒதுக்கற நிதிய முறையா செலவு பண்ணாம முறைகேடு பண்ணுறாங்க.குப்பை சேகரிக்கும் பணிக்கு, தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியிருக்கற நிலையில, குப்பைய முறையாக எடை பார்த்து தொகை விடுவிக்கறதில்ல. இஷ்டம் போல, கணக்கு எழுதி 'பில்' போடுறாங்க. குப்பையிலும் ஊழல் நடக்குதுனு, ஆதங்கத்தை கொட்டினார்.

வனத்தை காக்க வந்த 'டெக்ஸி'க்கு என்ன நடந்துச்சு!

உடுமலை பாரஸ்ட் ஆபீஸ்க்கு செய்திக்காக சென்றிருந்தேன். அங்கிருந்த, இயற்கை ஆர்வலர் ஒருவர், 'மோப்பநாய்க்கு ஒதுக்குன நிதியையும் விட்டு வைக்கலைங்க,' என, புலம்பினார். என்ன விஷயம்னு விசாரிச்சேன்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்துல, வனக்குற்றங்களை தடுக்கும் வகையில, மோப்ப நாய்கள் வழங்கப்பட்டன. உடுமலை சரகத்துக்கு, 'கடுவன்' என்ற மோப்பநாயும், அமராவதி சரகத்துக்கு, 'டெக்ஸி'யும் வந்தன.அவற்றை பராமரிக்கவும், பணியில் ஈடுபடுத்தவும், வனவர் நிலையிலுள்ள அலுவலருக்கு, ஆறு மாசம் பயிற்சியும் கொடுத்தாங்க. தனி வாகனம், பராமரிக்க வேட்டை தடுப்பு காவலர்கள் என சிறப்பு குழுவும் அமைச்சாங்க.ஆனா, முறையாக மோப்ப நாய்களை பயன்படுத்தாததால், குற்ற சம்பவங்கள் அதிகளவு நடக்குது. அதிலும், அமராவதி சரகத்திலுள்ள 'டெக்ஸி'யை பராமரித்த வனவர் பதவி உயர்வுல வேறிடத்துக்கு போயிட்டார். அதனை கவனிக்க ஆளில்லை.உணவு மற்றும் பராமரிக்க ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் முறைகேடு பண்ணிட்டாங்க. ஆறு மாசமா 'டெக்ஸி'யை கவனிக்காததால, போன வாரம் மர்மமான முறையில இறந்திருச்சு. இறப்புக்கான காரணத்தையும் விசாரிக்காம, அதன் சடலத்துக்கு அதிகாரிகள் 'சல்யூட்' அடித்து புதைச்சுட்டாங்க.அரசுக்கு சொந்தமான மோப்ப நாயை முறையாக பராமரிக்காம, முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அநியாயமாக ஒரு உயிர் போயிருச்சுனு, ஆதங்கப்பட்டாரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை