உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

வாகனங்கள் மீது கற்கள் வீசும் நபர்; காப்பகத்துல ஒப்படைப்பாங்களா?

பொள்ளாச்சி, ஆச்சிபட்டியில நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட நபர், 'கற்களை ரோட்டில் வீசிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தோம். சாதுர்யமாக தப்பி வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். அவங்களும் அங்க வந்து, அந்த நபரை அதட்டி அனுப்பி வச்சாங்க.அப்போது ஒரு நபர், 'போலீசார் வர்றாங்க, அதட்டி அனுப்புறாங்க. அப்புறம் மறுபடியும் அந்த நபர் திரும்பி வந்துடுறாங்க. ஏன் சார் நடவடிக்கை எடுக்க மாட்டீங்களான்னு போலீசார் கிட்ட கேட்டாரு. 'நாங்க அடிச்சு அவன துரத்தலாம். ஆனா, அத யாராவது போட்டோ, வீடியோ எடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து விரட்டும் போலீசாருன்னு போடுவாங்கப்பா. இப்போ, எத செய்தாலும் பயந்துக்கிட்டே செய்ய வேண்டியிருக்கு. அதுக்கு, அந்த நபரை கட்டுப்படுத்தி வச்சு, மனநல காப்பகத்துக்கு தான் தகவல் கொடுக்கணும். அவங்க வந்து, அவரை மீட்டுட்டு போகணும்,' என சொன்னார். இதை கேட்ட நண்பர், 'அவங்க சொல்லுறதிலும் நியாயம் இருக்கு. ஆனா, இப்படியே இருந்தா, பூனைக்கு யார் தான் மணி கட்டுவது என்பது போல, வாகனங்கள் மீது கற்களை வீசும் பிரச்னைக்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும்னு,' கேட்டார்.

பஸ் வரலைனா இனி மறியல் தான்; அதிகாரிகள கலங்கடிக்கும் மக்கள்

கிணத்துக்கடவில் உள்ள கோவிலில் நண்பரை சந்தித்தேன். இம்மிடிபாளையம் கிராமத்தில் பஸ் பிரச்னை பற்றி பேச ஆரம்பித்தார். போன வாரம், இம்மிடிபாளையம் வழியாக பஸ் வர்றது இல்லைனு ரோட்ல உட்கார்ந்து மறியல் பண்ணிணாங்க. அப்போ, அங்க வந்த போலீசார் அதிகாரிக கிட்ட போன்ல பேசினாங்க. இனிமேல் இப்படி நடக்காது, பஸ் இயக்கப்படும்னு வாக்குறுதி கொடுத்தாங்க. வாக்குறுதி கொடுத்த மாதிரி பஸ் இயக்கலைனா, எங்க ஊர் ரோட்ல உட்கார்ந்து மறியல் பண்ண மாட்டோம். கிணத்துக்கடவு மெயின் ரோட்டுக்கு வந்து மறியல் பண்ணுவோம்னு சொன்னாங்க. இந்த பிரச்னை முடிஞ்சு ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள கோவையில இருந்து வர்ற, 33சி பஸ் போன வாரத்துல ஒரு நாள் சாயந்திரம் வரல. இதனால, ஸ்கூல் குழந்தைகள் நடந்தே வீட்டுக்கு வந்தாங்க. இத பத்தி வழக்கம்போல அதிகாரிகள் கிட்ட சொல்லி இருக்காங்க. இனிமேல் இப்படி எதுவும் நடக்காது, உங்க ஊருக்கு கரெக்டா பஸ் வந்துரும்னு சொல்லி சமாளித்தாங்க. இன்னொரு தடவை இந்த மாதிரி நடந்தா மறியல் உறுதினு மக்கள் சொல்லிட்டாங்க. போக்குவரத்து அதிகாரிகள், கிராம பகுதிக்கு இயக்கற பஸ்கள் சரிவர போகுதானு அடிக்கடி ஆய்வு பண்ணினா நல்லாயிருக்கும்னு சொன்னார்.

கட்சியினரை உசுப்பேத்திய இ.பி.எஸ்.,; உற்சாகத்தில் துள்ளும் தொண்டர்கள்

வால்பாறை தொகுதியில இந்த முறை அ.தி.மு.க.,தான் போட்டியிடப்போகுதுனு உறுதியானதால் தொண்டர்கள் குஷியாக இருக்காங்கப்பா என, டீ கடையில் இரண்டு இளைஞர்கள் பேசிக்கொண்டனர். அவர்கள் பேசியதில் இருந்து... வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலையில, போன வாரம் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பேச்சை கேட்கவால்பாறையிலிருந்து அ.தி.மு.க.,வினருடன், கூட்டணி கட்சியான பா.ஜ.,வினரும் தனித்தனியாக வாகனங்கள்ல போயிருந்தாங்க. வால்பாறை தொகுதி எப்பவுமே அ.தி.மு.க.,வின் கோட்டை. அதை நி ரூ பிக்கும் வகையில் இந்த முறையும் போட்டியிடும் வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி பலமாக உள்ளதால், இந்த தேர்தல்ல நம்மை யாரும் அசைக்க முடியாதுனு, முன்னாள் முதல்வர் பேசினாரு. அதனால, இந்த முறையும் அ.தி.மு.க., வேட்பாளர் தான் போட்டியிடப்போகிறார் என்பது உறுதியானதால, தொண்டர்கள் உற்சாகத்துல இருக்காங்கனு, பேசிக்கிட்டாங்க.

உடைப்புக்கு போகற அரசு பஸ்; தொடர்ந்து இயக்கறதால அச்சம்

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ் ஊழியர்கள் சிலர் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் உரையாடலை கவனித்தேன். அதிலிருந்து... அரசு போக்குவரத்து கழக, பொள்ளாச்சி பணிமனைகளில் இருந்து, காலாவதியான அரசு பஸ்கள், கழிவோடு சேர்த்து உடைக்கப்படுது. குறிப்பா, 15 ஆண்டுகள்ல, 12 லட்சம் கி.மீ., துாரம் ஓடி உழைத்த பஸ்கள், 'ஐடியல்' (உடைப்புக்கு) அனுப்பப்படுது. அந்த வரிசையில, பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை, சோமந்துரைசித்தூர், பெத்தநாயக்கனூர், கோட்டூர், அங்கலக்குறிச்சி வழியாக ஆழியாறு செல்லும் அரசு பஸ் (10 பி) 'ஐடியல்' செய்யப்பட்டு இயக்கம் நிறுத்தப்பட்டது. அதற்கு மாற்றாக, புதிய பஸ் இயக்கப்படாமல், இம்மாதம் 'ஐடியல்' செய்யப்படவுள்ள டி.என். 38 என் 2770 எண்ணுடைய '10 பி' பஸ் இயக்கப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கு. அந்த பஸ்சை இயக்கும் டிரைவரும், கண்டக்டரும் செய்வதறியாது திணறுகின்றனர். கழிவுக்கு அனுப்பும் பஸ்சை இயக்கிட்டே இருந்தால், அதில் பயணிக்கறவங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டா, யார் பொறுப்பேற்பாங்கனு தெரியலை, என, ஆதங்கப்பட்டனர்.

கொடுக்க வேண்டியத கொடுத்து கூட்டம் சேர்த்து ஜெயிச்சுட்டாங்க

உடுமலையில் அரசியல் விமர்சக நண்பரை சந்தித்த போது, கூட்டம் சேர்க்கறது, அ.தி.மு.க., காரங்க ஜெயிச்சுட்டாங்கனு பேச ஆரம்பித்தார். என்ன நடந்ததுனு விசாரிச்சேன். உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரத்துக்கு வந்திருந்தார். மக்கள் கூட்டத்தை திரட்ட, 200, 300 ரூபா மற்றும் சேலை, சில்வர் குடம், தட்டு, தென்னங்கன்று என பல்வேறு பரிசு பொருட்கள் கொடுத்து, கிராமங்கள்ல இருந்து வேன், சரக்கு வாகனங்கள்ல அழைச்சிட்டு வந்திருந்தாங்க. பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை நிர்வாகிகள் ஏமாற்றாமல் இருக்க, நுழையும் பகுதிலேயே, எந்த கிராமத்துல இருந்து வாகனம் வருகிறது, வாகனத்துல இருக்கற தலைகள எண்ணி உள்ளே அனுப்பினாங்க. பழனிசாமி வந்து பேசத்துவங்கியதும் கூட்டம் கலையத்துவங்கியது. அவங்கவங்க வந்த வாகனத்துக்கு செல்ல துவங்கினாங்க. இதில், சில்வர் குடம், பணம் வழங்கும் பகுதியில, யார் முதலில் வாங்குவதுனு போட்டியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டுச்சு. போன மாசம், முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, தி.மு.க.,வினர் ஆட்கள திரட்டுவதில், ஏமாற்றமடைந்த நிலையில், அ.தி.மு.க..,வினர் ஆட்கள திரட்டுவதில் ஜெயிச்சுட்டாங்க. அதிலும், யு.கே.சி.,நகர், தங்கம்மாள் ஓடை பகுதியிலிருந்து அதிக பெண்கள், மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்திருந்தாங்க. தேர்தல் நெருங்க, நெருங்க மக்களுக்கு மதிப்பு அதிகமாயிட்டே இருக்குனு புரியுதுனு, சொன்னார்.

அரசு மானியம் கொடுத்தாலும்... அதிகாரிகளுக்கு மனசில்ல!

உடுமலை, விருகல்பட்டி நால் ரோட்டிலுள்ள பெரிய மரத்தடியில் வெயிலுக்கு ஒதுங்கியிருந்த விவசாயிகள் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து... மழை தீவிரமடையும் முன், மானாவாரியில் மக்காச்சோளம் நடவு செய்யலாம்னு இருந்தேன். மக்காச்சோளத்துக்கு கவர்மென்ட்ல மானியம் தர்றாங்களாம். அதுல விதைய வாங்கி நடவு செய்யலாம்னு இருக்கேனு ஒருத்தரு சொன்னாரு. அதுக்கு, மந்த ஏரியாவுல மானியத்துல விதை வாங்கி நட்டு செடியே முளைச்சிருச்சு. ஆனா குடிமங்கலம் வட்டார அக்ரி ஆபீசருங்க, இன்னமும் இந்த திட்டத்தை பத்தியே இதுவரை சொல்லல. அதுவும் நம்மூருக்கான ஆபீசர் இந்த பக்கமே வர்றது இல்லை. சரி நேரா ஆபீசுக்கு போனா விதை வினியோகிக்கும் டெப்போவிலும் அதிகாரிங்க இருக்கறதில்ல. இந்த இழுபறியால குறிப்பிட்ட சீசனுக்குள்ள நடவு செய்ய முடியாம போச்சுனு, இன்னொருத்தரு ஆதங்கப்பட்டாரு. விவசாயிகளுக்காக அரசாங்கம் திட்டம் போட்டாலும் அதிகாரிங்க அலட்சியத்தால, அத்தனையும் வீணாக போகுது. நாம புகார் சொன்னாலும், அதிகாரிங்க அதுக்கு தகுந்த மாதிரி பதில தயாரா வைச்சு இருப்பாங்க. நாம புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். கடனை வாங்கியாவது மழைக்கு முன்னாடி நடவு போட வேண்டியது தான், என, மற்ற விவசாயிகள், துண்ட உதறி தோள்ல போட்டுட்டு கிளம்பினாங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை