பொள்ளாச்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் குறித்த வகுப்புகளை நடத்துவதற்கு ஏதுவாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 'செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் இணையக் கருவிகள் அறிவுத் திட்டம்' (டி.என்., ஸ்பார்க்) துவக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,), கோடிங், இணையக் கருவிகள் குறித்த வகுப்புகள் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலும், இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, ஏ.ஐ., தொழில்நுட்ப வகுப்பு நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கவும் விருப்பம் கோரப்பட்டுள்ளது. இது குறித்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: 'ஹெடெக் லேப்' கொண்ட குறிப்பிட்ட சில அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான இ-மெயில் பள்ளிக் கல்வித்துறை வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. அதில், செயற்கை நுண்ணறிவு குறித்த ஆன்லைன் பயிற்சிக்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள், பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பாடங்கள் இல்லாத காரணத்தால் ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிக்காமல் உள்ளனர். அடுத்த கல்வியாண்டில், செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டால், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெறுவர். இத்தகைய பாடத்திற்கு அனைத்து அரசு பள்ளிகளில், தடையற்ற இணையதள வசதி ஏற்படுத்துவதும் கட்டாயம். தற்போதைய சூழலில் ஏ.ஐ., தொழில்நுட்ப வகுப்பு நடத்துவது, சாத்தியமில்லாத ஒன்றாகும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.