ஆட்டோவுக்கு புதிதாக பர்மிட் வழங்க வேண்டாமென கோரிக்கை
வால்பாறை; வால்பாறையில் ஆட்டோக்களுக்கு புதிதாக 'பர்மிட்' வழங்கக்கூடாது என, ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.வால்பாறையில், ஏற்கனவே 60 ஆட்டோக்கள் இயங்கும் நிலையில், கூடுதலாக, 50 ஆட்டோக்கள் இயக்க மாவட்ட கலெக்டர் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளார். இதற்கு வால்பாறை ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், வால்பாறை வந்த ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம், ஆட்டோ உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறையில் இயக்கப்படும் ஆட்டோக்கள் நிறுத்தக்கூட இட வசதி இல்லை. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகையும் தற்போது இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோக்களை இயக்கி வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் மிகவும் சிரமம் உள்ளது.தேயிலை தோட்ட தொழிலாளர்களும் அதிக அளவில் ஆட்டோக்களை பயன்படுத்துவதில்லை. எனவே, வால்பாறையில் ஆட்டோக்களுக்கு புதியதாக 'பர்மிட்' வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.