உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரி வசூலர் பணியிடங்கள் தொடர அரசாணையை திருத்த கோரிக்கை

வரி வசூலர் பணியிடங்கள் தொடர அரசாணையை திருத்த கோரிக்கை

கோவை; தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் வரி வசூலர் பணியிடத்தை தொடர, அரசாணையில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென, மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப, 2022ல் பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை (எண்: 152) பிறப்பிக்கப்பட்டது. வரி வசூலர்கள், துாய்மை பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், வாரிசு பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நீக்கப்பட்டன. தற்போது பணிபுரியும் வரி வசூலர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஓய்வு பெற்றதும் அப்பணியிடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட மாட்டாது. வரி வசூலர் பணியிடங்கள் வெளிமுகமை வாயிலாக நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதி - 2023ல் இளநிலை உதவியாளர்கள் மற்றும் வரி வசூலர்கள், தலா இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே உதவியாளர் பதவி உயர்வு பெற முடியும் என, தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரி வசூலர் பணியிடமே நீக்கப்பட்டு விட்டதால், பதவி உயர்வுக்கான நிபந்தனைகளில் இருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயனுக்கு, தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறுகையில், ''உதவியாளர் பதவி உயர்வு பெற, வரி வசூலராக இரண்டு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்கிற தகுதி வைக்கப்பட்டுள்ளது. பணியிடமே இல்லாத சூழலில், எவ்வாறு பணி புரிய முடியும். எனவே, நகர்ப்புற உள்ளாட்சி விதிகளில் குறிப்பிட்டுள்ள வரி வசூல் பணியிடம் தொடர்வதற்கு, திருத்திய அரசாணை வெளியிட வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை