உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களுக்கு உயிர் பயம் காட்டும் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

மக்களுக்கு உயிர் பயம் காட்டும் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

வால்பாறை : வால்பாறை மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், என, கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. தேயிலை எஸ்டேட்களின் மத்தியில் வால்பாறை நகரம் அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.குறிப்பாக, பி.ஏ.பி., குடியிருப்பு, கக்கன்காலனி, வாழைத்தோட்டம் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கடந்த வாரம், கக்கன் காலனியில் உள்ள உத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பகல் நேரத்தில் சிறுத்தை உலா வந்தது.அதேபோல், வால்பாறை நகரில் இந்தியன் வங்கி வழியாக கோ-ஆப்ரெடிவ் காலனிக்கு இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை, நாய்களை கவ்வி சென்றது. நேற்று முன்தினம் கால்நடை மருத்துவமனை பழைய கட்டடத்தின் அருகில் பகல் நேரத்தில் வந்த சிறுத்தை கோழியை கவ்வி சென்றதை நேரில் கண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.பொதுமக்கள் கூறியதாவது:எஸ்டேட் பகுதியில் மட்டுமே உலா வந்த வன விலங்குகள், தற்போது மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரிலும் உலா வருகின்றன. இதனால், பகல் நேரத்தில் கூட குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்ப முடியாத நிலை உள்ளது.எனவே, வால்பாறை நகரில் உள்ள பழைய கட்டடங்களை உடனடியாக இடிக்க வேண்டும். நகரில் குடியிருப்பு பகுதியை ஒட்டி வளர்ந்துள்ள புதர்களை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வால்பாறை நகர் பகுதி மக்களையும், சுற்றுலா பயணியரையும் அச்சுறுத்தும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில், வீடுகளில் சிறுத்தைக்கு பிடித்த நாய், கோழி, ஆடு, மாடு வளர்ப்பதால், அவை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. சிறுத்தை வராமல் இருக்க பொதுமக்கள் வீடுகளில் வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.மேலும், இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். திறந்தவெளியில் இறைச்சி கழிவுகளை வீசக்கூடாது. வீட்டை சுற்றியுள்ள புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்களும், சுற்றுலா பயணியரும் நள்ளிரவு நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ