சாலக்குடி வழியாக திருச்சூருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை
வால்பாறை : தமிழக -- கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி வழியாக சாலக்குடிக்கு, தினமும் காலை, மதியம் கேரளாவில் இருந்து தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே போல், மாநில எல்லையில் உள்ள மளுக்கப்பாறைக்கு, கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து, காலை முதல் மாலை வரை ஐந்து 'டிரிப்' அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், கடந்த, 2013 வரை அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக சாலக்குடிக்கு பஸ் இயக்கபட்டது. கலெக்சன் குறைவை காரணம் காட்டி, அந்த பஸ் நிறுத்தப்பட்டது.மக்கள் கூறியதாவது:வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண ஆர்வம் காட்டுகின்றனர். கேரளாவில் இருந்து இயக்கப்படும் தனியார் பஸ்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் செல்கின்றனர். வால்பாறையில் வசிக்கும் மக்கள் திருச்சூர் செல்ல, வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி சென்று பயணத்தை தொடர வேண்டியுள்ளது. இதனால், பயண நேரமும் அதிகமாகிறது.எனவே, இருமாநில மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் நலன் கருதி வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், வால்பாறை - சாலக்குடி வழியாக திருச்சூர் வரை பஸ் இயக்க வேண்டும்.இவ்வாறு, கூறினார்.