பொள்ளாச்சியை மாவட்டமாக்க கோரி பேட்ஜ் அணிந்த வருவாய்த்துறையினர்
பொள்ளாச்சி; பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும் என, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, உடுமலை, மடத்துக்குளம், ஆனைமலை, வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாகளை உள்ளடங்கிய, மாவட்டம் உருவாக வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில், பழநியை தலைமையிடமாக கொண்டு உடுமலை, மடத்துக்குளம் பகுதியை இணைத்து மாவட்டம் உருவாகுவதாக தகவல் பரவியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பொள்ளாச்சி, உடுமலை பகுதி மக்கள், ஆட்சேபனைகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணியாற்றினர்.கோரிக்கை அட்டையில், 'தமிழக அரசே, தமிழக அரசே! பொள்ளாச்சி மாவட்டம் வேண்டும்,' என வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.சங்க நிர்வாகிகள் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் உள்ள பல இடங்கள், தலைநகரில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதால், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், கால நேர விரயம்போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.எனவே, பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும் என கோவைக்கு முதல்வர் வந்த போது, மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.தற்போது, கோட்ட அளவிலான வட்டக்குழு கூட்டத்தில் பொள்ளாச்சி மாவட்டமாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து, அரசுக்கு கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினோம். இன்று (22ம் தேதி) ஈரோட்டில் நடைபெறும் மத்திய செயற்குழு கூட்டத்திலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்.இவ்வாறு, கூறினர்.