உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீயாய் வேலை செய்ய ஆளுங்கட்சியினருக்கு ரிவார்டு

தீயாய் வேலை செய்ய ஆளுங்கட்சியினருக்கு ரிவார்டு

பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த சித்ரா, காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் வந்திறங்கினாள். பக்கவாட்டு கழிவறையில் இருந்து குப்பென்று சிறுநீர் துர்நாற்றம் வீச, மூக்கை பொத்திக் கொண்டாள். முக கவசம் அணிந்து கொண்டு, வரவேற்க வந்திருந்த மித்ரா, ''என்னக்கா, டாய்லெட் ஸ்மெல் தாங்க முடியலையா,'' என கேட்டதற்கு, ''கார்ப்பரேஷன் கமிஷனர், தெனமும் வார்டு வார்டா இன்ஸ்பெக் ஷன் பண்றாரு. பஸ் ஸ்டாண்ட் பக்கம் எட்டிப் பார்க்கலாமுல்ல. டாய்லெட் எவ்ளோ மோசமா இருக்கு, குடிக்க தண்ணீ இருக்கறதில்லை, வயசானவங்க ஒக்கார்றதுக்கு சீட் வசதி இருக்கறதில்லை,'' என, அங்கலாய்த்தாள் சித்ரா. கைமாறியது 'ல'கரம் இருவரும் பேசிக் கொண்டே நுழைவாயிலில் உள்ள, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இரண்டு பிளேட் சாம்பார் இட்லி ஆர்டர் கொடுத்த மித்ரா, ''மேலிடத்து உத்தரவுங்கிறதுனால, கார்ப்பரேஷன் சென்ட்ரல் ஜோன் ஆபீசர் 'ரிலீவ்' ஆகிட்டாருன்னு சொன்னாங்களே...'' என, கிளறினாள். ''ஆமாப்பா! சம்பந்தப்பட்ட ஆபீசர், ரெண்டு ஜோன் 'கவனிச்சிட்டு' இருந்தாரு. மனையை வரன்முறை செய்ற விவகாரத்துல சட்ட சிக்கல் இருக்கு; அரசாணைப்படி வரன்முறை செய்ய முடியாதுன்னு சொல்லியிருக்காரு. இன்னொரு ஆபீசரோ, 'ஓகே' செஞ்சு, சம்பந்தப்பட்ட பார்ட்டி, கார்ப்பரேஷனுக்கு வரன்முறை கட்டணமே செலுத்திட்டாங்களாம். இந்த விவகாரத்துல 25 'ல'கரம் கைமாறி இருக்கறதா, ஆளுங்கட்சி கவுன்சிலர்ஸ் தரப்புல சொல்றாங்க,'' என்றபடி, டேபிளுக்கு வந்த சாம்பார் இட்லியை சாப்பிட துவங்கினாள் சித்ரா. கெத்துக் காட்டும் 'மாஜி' ''அதெல்லாம் இருக்கட்டும். நம்மூருக்கு சி.எம்., வந்திருந்தாரே... அதுல, ஏதாச்சும் விசேஷமா சொல்ற மாதிரி இன்பர்மேஷன் இருக்குதா...'' ''மேம்பாலத்தை திறந்து வச்சதை, மிகப்பெரிய அச்சீவ்மென்ட்டா சி.எம்., தரப்புல நெனைக்கிறாங்க. மேற்கு மண்டல பொறுப்பாளரான செந்தில்பாலாஜியை, புத்தொழில் மாநாடு மேடையில ஏத்தல; அதை புரிஞ்சுக்கிட்ட சி.எம்., அவரோட பேச்சில், பெயரை தவறாம குறிப்பிட்டிருக்காரு. அடுத்தடுத்து நிகழ்ச்சிகள்ல 'மிஸ்' ஆகாம, அவரை மேடையில ஏத்தி, முக்கியத்துவம் கொடுத்திருக்காரு,'' ''அவரால பதவி பறிக்கப்பட்ட கட்சி நிர்வாகியும், 'கெத்து' காட்டுனாருன்னு உடன்பிறப்புகள் சொல்றாங்களே...'' ''அதுவா... அந்த நிர்வாகி, ரெண்டு எழுத்து மினிஸ்டரோட தீவிர ஆதரவாளருங்கிறது எல்லாருக்கும் தெரியும். சி.எம்., வந்தப்போ, அந்த மினிஸ்டர் கூடவே அவரும் இருந்தாரு. தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, அசெம்ப்ளி எலக்சன்ல சீட் வாங்கி, ஜெயிச்சுக் காட்டப் போறேன்னு, ஆதரவு வட்டத்துல சொல்லிட்டு இருக்காரு. அதுக்கேத்த மாதிரி, மினிஸ்டர் மா.சு., தலைமையில நடந்த பங்சன்ல விருது வாங்கியிருக்காரு. ஒடனே, சி.எம்., - டெபுடி சி.எம்.,கிட்ட வாழ்த்து வாங்கியிருக்காரு. இதையெல்லாம் சமூக வலைதள பக்கத்துல போட்டு, கட்சிக்குள்ள செல்வாக்கு இன்னும் குறையலைன்னு காண்பிச்சிட்டு இருக்காரு,'' கரன்சி பட்டுவாடா ''தீபாவளி செலவுக்கு ஆளுங்கட்சி தரப்புல, கரன்சி பட்டுவாடா துவங்கியிருச்சுன்னு கேள்விப்பட்டேனே...'' என, சப்ஜெக்ட் மாறினாள் மித்ரா. ''ஆமா, மித்து! எனக்கும் தகவல் வந்துச்சு. முதல்கட்டமா, பகுதி கழக செயலாளர்களுக்கு மூனு லட்சம், ஒன்றிய, நகர செயலாளருக்கு, 2.5 லட்சம், மத்தவங்களுக்கு, 1.5 லட்சம், 1.25 லட்சம், 1 லட்சம் வரைக்கும் கொடுத்திருக்காங்க. இது, மூன்றெழுத்து ஊர்க்காரர் கொடுத்த தீபாவளி பரிசாம்,'' ''இதேமாதிரி, கட்சி தலைமையில இருந்தும், பண்டிகை பணம் கொடுக்கறது வழக்கம். புதன்கிழமையில இருந்து பட்டுவாடா ஆகும்னு இன்பர்மேஷன் பரவி இருக்கு. கார்ப்பரேஷன் கவுன்சிலர்களுக்கு ஒவ்வொரு மாசமும் ஒரு 'கவர்' கொடுப்பாங்க. இந்த மாசம் கவர் இன்னும் வந்து சேரலையாம். பண்டிகை பணத்தையும், மாமூல் பணத்தையும் தனித்தனியா பிரிச்சுக் கொடுக்கணும்னு நெனைக்கிறாங்க,'' என்ற சித்ரா, காபி ஆர்டர் கொடுத்தாள். தீபாவளி கலெக்சன் ''கவர்மென்ட் ஆபீசர்ஸ் தரப்பிலும் தீபாவளி கலெக்சனை அள்ளுறாங்களாமே...'' என, நோண்டினாள் மித்ரா. ''ஆமாப்பா... உண்மைதான்! தாலுகா ஆபீசுகள்ல வேலை பார்க்கறவங்க, தீபாவளி இனாம் வசூலை ஆரம்பிச்சிட்டாங்க. ஆபீசர்ஸ் தரப்புல தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப, 'டார்கெட்' பிக்ஸ் பண்ணி வசூல் பண்றாங்க. கலெக்டர் ஆபீசுல இருக்கற ஆபீசர்ஸ், ஊழியர்களுக்கு கொடுக்கறதுக்கு தேவையான ஸ்வீட் பாக்ஸ்களை இலவசமா ரெடி பண்ற வேலையை, உணவு பாதுகாப்புத்துறைக்கு கொடுத்திருக்காங்க. இதுக்கான பொறுப்பை, கலெக்டரேட் லேடி ஆபீசர்கிட்ட ஒப்படைச்சிருக்காங்க. ஆவின்ல இருந்து நெய், பால்பேடா, மைசூர்பா இனாமா வாங்குற பொறுப்பை, இன்னொரு ஆபீசருக்கு கொடுத்திருக்காங்க,'' ஸ்வீட் பாக்ஸ் ''அக்கா, ஸ்வீட் பாக்ஸ்ன்னு சொன்னதும் எனக்கொரு தகவல் ஞாபகத்துக்கு வருது. சிட்டிக்குள்ள பேமஸான ஐந்தெழுத்து ஸ்வீட் கடை தயாரிப்பு கூடம், ரூரல் ஏரியாவுல இருக்கு. அந்த லிமிட் ஸ்டேஷனுக்கு, ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு, இலவசமா ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கறது வழக்கமாம். இந்த வருஷம், 100 கிலோ கேட்டிருக்காங்க. அந்த ஸ்டேஷன்ல இதுக்கு முன்னாடி, டூட்டி பார்த்த போலீஸ் ஆபீசர் ஒருத்தரு, இப்போ, சிட்டி லிமிட்டுக்கு வந்துட்டாரு. பழைய பழக்கத்துல, சம்பந்தப்பட்ட கடைக்காரங்களை கான்டாக்ட் பண்ணி, 150 கிலோ ஸ்வீட் பாக்ஸ் வந்தாகணும்னு கறாரா சொல்லியிருக்காராம். என்ன செய்றதுன்னு தெரியாம, ஸ்வீட் கடைக்காரங்க முழிச்சிட்டு இருக்காங்க. போலீஸ்ங்கிற கெத்துல கடை கடையா போயி, ஓசியில ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு வாங்குற கலாசாரத்துக்கு போலீஸ் கமிஷனரும், எஸ்.பி.,யும் முற்றுப்புள்ளி வைக்கணும்னு, வியாபாரிகள் நெனைக்கிறாங்க,'' 24 மணி நேர சேல்ஸ் ''ஸ்டேஷனுக்கு மாசம் தவறாம மாமூல் கொடுக்கறதுனால, 24 மணி நேர சர்வீஸ் மாதிரி, டாஸ்மாக் 'பார்'கள்ல சேல்ஸ் பட்டைய கெளப்புதாமே...'' ''ஆமாக்கா, சூலுார், கருமத்தம்பட்டி ஏரியாவுல 'டாஸ்மாக்' சரக்கை, 'பார்'கள்ல பதுக்கி வச்சிருந்து சேல்ஸ் பண்றாங்க. பாட்டிலுக்கு, 30ல இருந்து, 50 ரூபாய் வரைக்கும் கூடுதலா ரேட் வச்சு விக்கிறாங்க. சோமனுார்ல நொய்யல் பாலத்தை ஒட்டி இருக்கற கடையில கூட்டம் அள்ளுது. யார் யாருக்கு மாமூல் கொடுக்கணுமோ, அவுங்களுக்கு கொடுத்துட்டு, வெளிப்படையாவே சரக்கு சேல்ஸ் பண்றாங்க. பார் நடத்துறவங்க, 30 ஆயிரத்துல இருந்து, 40 ஆயிரம் வரை மாமூல் கொடுக்குறாங்களாம்,'' போதைப்பழக்கம் ''அதெல்லாம் சரி... ஸ்கூல் ஸ்டூடன்ஸ் மத்தியிலும் போதைப் பழக்கம் ஜாஸ்தியாகிடுச்சுன்னு சொல்றாங்களே... உண்மைதானா...'' ''நீங்க சொல்றது சரிதான், நானும் கேள்விப்பட்டேன். 'கூல் லிப்', 'ஹான்ஸ்' போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துறாங்க. ஆறாம் வகுப்பு பசங்களே 'யூஸ்' பண்றதா டீச்சர்ஸ் சொல்றாங்க. பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கற சில பசங்களுக்கு 'டி.சி.,' கொடுத்துட்டாங்க. போதைப் பொருளை காரணமா காட்ட முடியாதுன்னு, 'சப்பை'யா வேறொரு விஷயத்தை சொல்லியிருக்காங்க,'' ''கார்ப்பரேஷன் ஸ்கூல்கள்லயும், பசங்க மத்தியில போதை வஸ்து யூஸ் பண்றது ஜாஸ்தியாகிடுச்சு. கூல் லிப், ஹான்ஸ் விக்கிறது யாருன்னு கண்டுபிடிச்சு கடுமையா ஆக்சன் எடுக்கணும்னு, டீச்சர்ஸ் தரப்புல விரும்புறாங்க. இதை ஐ.பி.எஸ்., ஆபீசர்களும், ஐ.ஏ.எஸ்., ஆபீசர்களும் புரிஞ்சு ஆக்சன் எடுக்கணும்,'' என்ற மித்ரா, ''நம்மூர்ல புத்தொழில் மாநாடு ரெண்டு நாள் நடந்துச்சு... அதைப்பத்தி எதுவுமே சொல்லலையே.... '' என, 'ரூட்' மாறினாள். ஒழுகும் ஓய்வறை ''கவர்மென்ட் பஸ் ஓட்டுற டிரைவர்கள், ஓய்வெடுக்கற ரூம் ஒழுகுதுன்னு கேள்விப்பட்டேன். மழை காலத்துல ரெஸ்ட் எடுக்க முடியாம, அவஸ்தைப்படுறதா சொன்னாங்க...'' ''ஆமாக்கா, உண்மைதான்! மேட்டுப்பாளையம்-2 கிளையில டிரைவர்கள் ரெஸ்ட் எடுக்கறதுக்கு ரூம் இருக்கு. அந்த ரூம் மேற்கூரை ஓட்டையா இருக்கறதால, மழை நீர் வந்துடுது. அரசு போக்குவரத்து கழக மேலாளர் கண்டுக்கறதில்லையாம். மழை நீர் ஒழுகுறதை வீடியோ எடுத்து குரூப்ல போட்டிருக்காங்க. இது, சர்ச்சையா ஓடிட்டு இருக்கு,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா. பின் இருக்கையில் அமர்ந்தபடி, தீபாவளி கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் சித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை