காற்றில் பறந்த மேற்கூரை; பள்ளி மாணவர்கள் அச்சம்
வால்பாறை; வால்பாறையில், அரசு பள்ளியில் காற்றுக்கு மேற்கூரை சேதமடைந்ததால், மாணவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது முருகாளி எஸ்டேட். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 23 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த வாரம், வால்பாறையில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், பள்ளி மேற்கூரை காற்றில் பறந்தது.மேலும் பள்ளி வகுப்பறை முழுவதும் மழை நீர் தேங்கி, மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. கழிப்பிடத்தின் மேல் இருந்த சிமென்ட் சீட் மழையால் சேதமடைந்தது.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் உதயன் கொடுத்த தகவலின் பேரில், கல்வி அதிகாரிகள், நகராட்சி கவுன்சிலர் நேரில் பார்வையிட்டனர்.பெற்றோர் கூறுகையில், 'முருகாளி எஸ்டேட் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகுப்பறை மேற்கூரையை நகராட்சி சார்பில் விரைவில் சீரமைக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்,' என்றனர்.