தென்னை கிளஸ்டர் அமைக்க ரூ.250 கோடி நிதி
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், விவசாயிகளை ஒருங்கிணைத்து, 'தென்னை கிளஸ்டர்' அமைக்க மத்திய அரசு, 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.பொள்ளாச்சியில், தென்னை விவசாயத்தை பாதுகாக்க வேண்டுமென, விவசாயிகளின் தொடர் கோரிக்கையால், மத்திய வேளாண்துறை செயலர் கடந்தாண்டு பொள்ளாச்சியில் ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது பொள்ளாச்சி பகுதியில், மத்திய அரசின் தேசிய தோட்டக்கலைத்துறை சார்பில், 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'தென்னை கிளஸ்டர்' அமைக்க உத்தரவிட்டுள்ளது.இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்து முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன் கூறுகையில், ''பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, 'பொள்ளாச்சி தென்னை கிளஸ்டர்' அமைக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது. ''இதனால், விவசாயிகள் பயன்பெற முடியும். இதன் பயன்கள் குறித்து விளக்கமளித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,'' என்றார்.