உடுமலை : மழைக்காலத்தில், பஸ் ஸ்டாண்ட் முழுவதும், குண்டும், குழியுமாக மாறி தண்ணீர் தேங்குவதால், பயணியர் மிகுந்த அவதிப்படுகின்றனர்.உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். ஆனால், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல், அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.மழைக்காலத்தில், பஸ்கள் செல்லும் ஓடுதளம் முழுவதும் குண்டும், குழியுமாக மாறி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், பயணியர் நடந்து செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது.குறிப்பாக, பழநி, தாராபுரம் வழித்தட பஸ்கள் நிற்கும் இடத்தில், ஓடுதளம் படுமோசமான நிலையில் உள்ளது. மேலும், பயணியர் காத்திருப்பு பகுதி அருகே, சாக்கடை கால்வாய் திறந்தே கிடக்கிறது.இங்கு குழி இருப்பது தெரியாமல், இரவு நேரங்களில், பயணியர் நிலைதடுமாறி கீழே விழும் அவல நிலை உள்ளது.இதே போல், திருப்பூர், செஞ்சேரிமலை வழித்தட பஸ்களுக்காக பயணியர் காத்திருக்கும் நடைபாதை முழுவதும், தண்ணீர் பரவி நிற்கிறது. இதனால், பயணியர் மழையில் நனைந்தபடியே பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.நடந்து செல்லும் போதே வழுக்கி விடுவதால், முதியவர்கள் நிலை பரிதாபமாகி விடுகிறது. மேலும், போதிய கழிப்பிட வசதியும் இல்லாததால், நடைபாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இவ்வாறு, உடுமலை பஸ் ஸ்டாண்டுக்குள் பயணியர் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல், இருப்பது அனைத்து தரப்பினரையும் வேதனைக்குள்ளாகியுள்ளது.