உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகள் இணைப்பால் ஊரக வளர்ச்சித்துறை இருக்காது: துறை அலுவலர்கள் கொதிப்பு

ஊராட்சிகள் இணைப்பால் ஊரக வளர்ச்சித்துறை இருக்காது: துறை அலுவலர்கள் கொதிப்பு

அன்னுார்; உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்தும் தமிழக அரசின் அறிவிப்பால், ஊரக வளர்ச்சித் துறையே காணாமல் போகும் அபாயம் உள்ளது என துறை அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது : இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் ஒரு இணைப்புக்கு மாதம் 60 ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேரூராட்சியாக தரம் உயர்த்தும் போது இந்தக் கட்டணம் 120 ரூபாய் ஆக உயரும். நகராட்சியுடன் இணைக்கப்படும்போது 150 முதல் 200 ரூபாயாக உயரும். மாநகராட்சியில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், வீட்டு மனை அங்கீகார கட்டணம், காலியிட வரி ஆகியவை 2 1/2 மடங்கு கூடுதலாக விதிக்கப்படும். வருமானம் குறைவாக உள்ள கிராம ஊராட்சி மக்கள் இதை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. தற்போது அரசின் புதிய அறிவிப்பால் இவற்றின் எண்ணிக்கை 12,174 ஆக குறைகிறது. இத்துடன் தற்போது உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் 50க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.இதனால் நாளடைவில் ஊரக வளர்ச்சித் துறை என்கிற துறையே இல்லாத நிலை ஏற்படும். இந்தத் துறையே காணாமல் போகும். மத்திய அரசு கிராம ஊராட்சிகளுக்கு என மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டம், வீடு கட்டும் திட்டம் என பல்வேறு திட்டங்களை கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தி வருகிறது. நகர்ப்புற துறைக்கு கீழ் வரும் கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது. இந்தத் திட்டங்களின் பயன்களை பொதுமக்கள் பெற முடியாது. அரசு ஒரு ஆணையம் அமைக்க வேண்டும். மறு வரையறை செய்யப்படும் உள்ளாட்சி அமைப்புகளில், வசிக்கும் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் கருத்து கேட்டு வெளிப்படையாக உள்ளாட்சி அமைப்புகளை இணைத்தல், தரம் உயர்த்தல் பணியை செய்ய வேண்டும்.இவ்வாறு அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை