அங்கன்வாடி மையங்களில் துாய்மை பணி; உறுதிபடுத்தப்படும் குழந்தைகள் பாதுகாப்பு
பொள்ளாச்சி; அங்கன்வாடி மையங்களில், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வகையில், மனதளவில் தயார் படுத்துவதற்காக, முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, இரண்டு முதல், ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.அவ்வகையில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களில், 1,780 குழந்தைகள்; தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 99 அங்கன்வாடி மைங்களில், 1,750 குழந்தைகள் வரை, முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.பள்ளிப் பருவத்துக்கு முன்பே, கல்வியில் நல்ல வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக பெற்றோரும் ஆர்வம் கொள்கின்றனர். தங்களது குழந்தைகள் படிப்புடன், பள்ளி செல்லும் நடைமுறை கற்றுக்கொள்வர் என்பதால், அங்கன்வாடிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்வோர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.தற்போது, கோடை வெயில் காரணமாக, விஷப்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால், அங்கன்வாடிகளில், வாரந்தோறும் முறையாக துாய்மை பணி மேற்கொள்ள பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறுகையில், ''அங்கன்வாடி மைய வளாகங்களில், செடிகள் மற்றும் முட்புதர்கள் காணப்பட்டால், அவைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வாரந்தோறும் சனிக்கிழமை அங்கன்வாடியில் துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், குழந்தைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது,'' என்றார்.