நான்கு ஆண்டுகளாக தகரக்கொட்டகையில் குடித்தனம்; குடியிருப்பை ஒதுக்கக்கோரி துாய்மைப்பணியாளர்கள் போராட்டம்
கோவை : உக்கடத்தில் கட்டியுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கக்கோரி, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், செல்வபுரத்தில் உள்ள அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, மாலை, 4:00 மணியில் இருந்து இரவு, 8:00 மணி வரை, 4 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர்.உக்கடம் சி.எம்.சி., காலனியில் வசித்த துாய்மை பணியாளர்களுக்காக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. மொத்தம், 520 வீடுகள் கட்ட வேண்டும்; 222 வீடுகளே உள்ளன.புல்லுக்காடு மைதானத்தில் தகர கொட்டகையில், 306 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று வீடு வழங்க வேண்டும். தி.மு.க.,வினர் குறுக்கிடுவதால், பயனாளிகளுக்கு ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.இக்குடியிருப்பை முதல்வர் திறந்து வைத்து, ஐந்து மாதங்களாகியும் இன்னும் ஒதுக்காததால், நேற்று மாலை, 4:00 மணிக்கு, செல்வபுரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை, துாய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாக பொறியாளர் ஜீவானந்தம் பேச்சு நடத்தியபோது, 'கலெக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி, பேசி விட்டுச் சொல்கிறேன்' என்று கூறியதால், சமரசம் ஏற்படவில்லை. அதனால், அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்கள் கூறும்போது, 'எங்களது வீடுகளை இழந்து, நான்கு ஆண்டுகளாகி விட்டது; இடம் கொடுத்து குடியிருப்பும் கட்டப்பட்டு விட்டது; இன்னும் ஒதுக்கித்தராதது ஏன்' என கேட்டனர்.வாரிய அதிகாரிகள் சரியாக பதிலளிக்காமல், கலெக்டரிடம் உடனடியாக 'அப்பாயின்மென்ட் பெற முடியாது' என கூறினர். இதனால் நேரம் செல்ல, செல்ல பிரச்னை பெரிதாகிக் கொண்டேயிருந்தது. அதன்பின், 'தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு பிரதிநிதிகள் மட்டும் வாருங்கள்; பேச்சு நடத்தலாம்' என, அழைத்துச் சென்றனர். அவர்களிடம் தெற்கு தாசில்தார் முகமது சொகைப் பேச்சு நடத்தினார்.இதுகுறித்து, கலெக்டரிடம் கேட்ட போது, ''தெற்கு கோட்டாட்சியர், தாசில்தார் அடங்கிய குழு அமைத்து, உண்மையான துாய்மை பணியாளர்களை கண்டறிந்து, வீடு ஒதுக்கப்படும். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாத அளவுக்கு, நடவடிக்கை துரிதப்படுத்தப்படும்,'' என்றார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி, சபாநாயகருக்கு கொடுத்துள்ள கடிதத்தில், 'கோவையில் துாய்மை பணியாளர்களுக்கு, இரு இடங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், முதல்வரால் திறக்கப்பட்டு பல மாதங்களாகி விட்டது. இன்னும் ஒதுக்கீடு செய்யாததால், ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து விவாதிக்க வேண்டும்' என, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர குறிப்பிட்டிருக்கிறார்.