சாடிவயல் யானைகள் முகாம்; அடுத்த மாதம் பணிகள் நிறைவு
தொண்டாமுத்துார் ; சாடிவயலில், புதிதாக கட்டப்பட்டு வரும் யானைகள் முகாம் பணி, 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதால், அடுத்த மாதம் முழு பணிகளும் நிறைவடையும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.கோவை போளுவாம்பட்டி வனச்சரகம் சாடிவயலில், கடந்த, 2012ம் ஆண்டு யானைகள் முகாம் துவங்கப்பட்டது. கும்கி யானைகள் வளர்க்கப்பட்டு, கோவை மாவட்டத்தில், காட்டு யானைகளை கட்டுப்படுத்த தேவைப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், கடந்த, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம், இங்கிருந்த கும்கி யானை, டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின், இங்கு மீண்டும் கும்கி யானைகள் கொண்டுவரப்படவில்லை.இந்நிலையில், சாடிவயலில், 8 கோடி ரூபாய் செலவில், யானைகள் முகாம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, யானைகள் முகாம் பணிக்கு, டெண்டர் விடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், சாடிவயலில், 50 ஏக்கர் பரப்பளவில், முகாம் பணிகள் துவங்கியது. இதில், யானைகளுக்கு ஷெட்- 18, குட்டைகள் -3, கரோல் -2, போர்வெல், மாவுத் மற்றும் காவடிகளுக்கான விடுதிகள், சமையலறை, யானைகள் குளிக்க சவர், தண்ணீர் தொட்டி, யானைகள் மேய்ச்சலுக்கான பயிர் வளர்ப்பு, வாட்ச் டவர், கால்நடை மருந்தகம், முகாமை சுற்றிலும் யானைகள் அகழி, மின் வேலி உள்ளிட்டவைகள் அமைக்கப்படுகிறது. முழுவீச்சில் நடந்து வந்த பணிகள் தற்போது முடிவடையும் தருவாயை எட்டியுள்ளது.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ''சாடிவயல் யானைகள் முகாமில், கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. மொத்த பணிகளில், 80 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மின்வேலி அமைத்தல், அகழி வெட்டுதல், சூரிய சக்தி மின்சார விளக்கு பொருத்துதல் போன்ற 20 சதவீத பணிகள் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. மழையால், சிறிது காலதாமதம் ஏற்பட்டது. அடுத்த மாதத்திற்குள், அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடையும்,'' என்றனர்.