உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பள்ளி வாகனத்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

 பள்ளி வாகனத்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

கோவை :: சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் சக்கரம், நேற்று திடீரென கழன்று ஓடியது. இச்சம்பவம், பள்ளி பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் நேற்று (டிச.20) பிற்பகல், சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின், பின்புற சக்கரம் ஒன்று திடீரென கழன்று தனியாக உருண்டு சென்றது. ஓட்டுநர் வாகனத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, மேம்பாலத்தின் ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து நேரிடாமல் தவிர்க்கப்பட்டது. கழன்ற சக்கரம் மேம்பாலத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உருண்டு சென்றதாக கூறப்படுகிறது. சம்பவ நேரத்தில் வாகனத்தில் பள்ளி மாணவர்கள் யாரும் பயணிக்கவில்லை; ஆசிரியர்கள் சிலர் மட்டுமே பயணித்துள்ளனர். தனியார் பள்ளி வாகனங்கள் முறையான அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று, சமீபத்தில் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இத்தகைய விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த வாகனத்தின் சக்கரம் கழன்ற சம்பவம், பள்ளி வாகனங்களின் முறையான பராமரிப்பு மற்றும் தணிக்கை குறித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) நந்தகுமார் கூறுகையில், “மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களையும் முறையாக பராமரிக்கவும், பாதுகாப்பு விதிமுறைகளின்படி வாகனங்களின் தரம் இருப்பதை உறுதி செய்யவும், பள்ளி நிர்வாகங்களுக்கு மீண்டும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்,” எனத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை