விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறந்தாச்சு: பாட புத்தகங்கள் வழங்கல்
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகள், காலாண்டு விடுமுறைக்கு பின் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளான நேற்று மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.காலாண்டுத்தேர்வு முடிந்து, செப்., 28ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை விடுமுறை விடப்பட்டன. விடுமுறை நிறைவடைந்த நிலையில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து, தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாட நுால்கள், குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. வடக்கு வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி தலைமை வகித்து, மாணவர்களுக்கு விலையில்லா பாட நுாங்கள், குறிப்பேடுகளை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். பள்ளியின் சார்பில் தொடக்க நிலை மாணவர்களுக்கு பிளாஸ்டிக் நாற்காலி வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அய்யம்மாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா பாட நுால்கள், குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. உடுமலை
உடுமலை சுற்றுவட்டார பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு, 2024 - 25க்கான இரண்டாம் பருவம் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று முதல் துவங்கியது. மாணவர்களுக்கு மூன்று பருவங்களுக்கான புத்தகங்கள், நலத்திட்ட பொருட்கள் கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படுகின்றன.வகுப்புகள் துவங்கும் முதல் நாளில், பாடப்புத்தகங்கள் மாணவர்கள் கையில் இருக்கும் வகையில் அனைவருக்கும் வினியோகிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.இதன்படி விடுமுறையில் கல்வித்துறையின் சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. அதன்பின், பள்ளி முதல் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.இரண்டாம் பருவத்தின் முதல் நாளான நேற்று உடுமலை வட்டாரத்தில் 117, குடிமங்கலத்தில் 59, மடத்துக்குளத்தில் 64 அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் இரண்டாம் பருவத்துக்கான பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன. வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிட்டனர். மாணவர்களுக்கான இரண்டாம் பருவ வகுப்புகளும் துவக்கப்பட்டன. - நிருபர் குழு -