மேலும் செய்திகள்
தேர்வு விடுமுறை நிறைவு; நாளை பள்ளிகள் திறப்பு
05-Oct-2025
- நிருபர் குழு -காலாண்டு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு, செப்., 10ல் துவங்கி, 26ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து, செப்., 27 முதல் அக்., 5ம் தேதி வரை, ஒன்பது நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை நிறைவு பெற்று, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக, பள்ளிகளில் துாய்மை பணி முடுக்கி விடப்பட்டிருந்தன. அவ்வகையில், மாணவ, மாணவியர் நேற்று உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர். ஏற்கனவே, ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் தருவிக்கப்பட்டிருந்த நிலையில், இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தொப்பம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கணேசன், மாணவ, மாணவியருக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அய்யம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் மாணவ, மாணவியருக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. புளியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் சித்ரா தலைமையில் உதவி தலைமையாசிரியர் மாரி உள்ளிட்டோர் மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் வழங்கினர். ஆசிரியர்கள் கூறுகையில், 'நேற்று, மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தமட்டில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் கற்றல் திறனில் பின்தங்கியோர் கண்டறிந்து உரிய பயிற்சி அளிக்கப்படும்,' என்றனர். உடுமலை உடுமலை கோட்டத்தில், முதல் பருவ விடுமுறை முடிந்து நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. உடுமலை ராமசாமி நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை வட்டார கல்வி அலுவலர் மஞ்சுளா வழங்கினார். வட்டார கல்வி அலுவலருடன் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியரும் உடனிருந்தனர். இதே போல் உடுமலை பகுதியிலுள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. வால்பாறை வால்பாறையில், 53 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், 18 அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள் என, மொத்தம், 85 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டனர்,'என்றனர்.
05-Oct-2025