ஏழு எருமை பள்ளம் ஓடையில் பொங்கும் நுரை; கால்நடைகள், விவசாயம் பாதிக்கும் அபாயம்
மேட்டுப்பாளையம் : ஏழு எருமை பள்ளம் ஓடையில், பல மாதங்களாக நுரை பொங்கி கழிவு நீர் செல்கிறது. அது பவானி ஆற்றில் நேரடியாக கலப்பதால் கால்நடைகள், விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குந்தா மலைப்பகுதியில் துவங்கும் பவானி ஆறு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணையை சென்றடைகிறது. பவானி ஆற்று நீரை நம்பியே விவசாயம் உள்ளது. அதே போல் பவானி ஆறு வாயிலாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 14க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதனிடையே பவானி ஆற்றுக்கு நீர்வரத்து வரும் ஓடைகளில் மிகவும் முக்கிய ஓடையாக, ஏழு எருமை பள்ளம் உள்ளது.இவ்வுளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஓடையில் மழை பெய்யும் போது மட்டுமே தண்ணீர் ஓரளவு மாசு இல்லாமல் செல்கிறது. பிற நாட்களில் பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பேரூராட்சிகளின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், தொழில்நிறுவனங்களின் கழிவு நீர் போன்றவைகள் தான் செல்கிறது. இதனால் பல மாதங்களாக ஓடை தண்ணீர் கருப்பு நீறத்திலும், நுரை பொங்கியும் செல்கிறது. முற்றிலும் மாசடைந்த ஓடை நீர், பவானி ஆற்றில் கலந்து பவானிசாகர் அணையை சென்றடைகிறது.இதனால் பவானி ஆறு மற்றும் பவானிசாகர் அணை தண்ணீரும் மாசு அடைந்து, கால்நடைகள் மற்றும் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதே போல் சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்கள், விளைநிலங்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-ஏழு எருமை பள்ளத்திற்கு வரும் ஓடை நீர் முற்றிலும் மாசடைந்து வருகிறது. பல மாதங்களாக நுரை பொங்குகிறது. இதுபோன்ற கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து விடவில்லை என்றால், எதிர்காலத்தில் பவானி ஆறு முழுவதும் மாசடைந்து சாக்கடையாக மாறிவிடும். கால்நடைகள் வளர்ப்பு, விவசாயம் குறைந்து விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.